பேங்காக்: தாய்லாந்து, கம்போடியாவுடனான எல்லைப் பகுதியில் 10 கிலோமீட்டர் நீளம்கொண்ட வேலியை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
அந்த வேலியை அமைப்பதற்குத் தேவையான முதலீடாக ‘ஹத்தாய் திப்’ நிதி விளங்கும். தாய்லாந்து இளவரசி சுலாபோர்ன் குரோம் ஃபிரா ஸ்ரீசவங்கவதனா நன்கொடையாக அளித்துள்ள ஒரு மில்லியன் பாட்டைக் (40,130 வெள்ளி) கொண்டு அந்த நிதி தொடங்கப்படும் என்று அந்நாட்டுத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் நட்டாஃபொன் நர்க்ஃபனிட் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) தெரிவித்தார்.
எல்லைக் கோடுகள் இடம்பெறவேண்டும் என்று திட்டவட்டமாக ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிகளில் புதிய வேலி அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். வேலியை அமைப்பதற்கான பணிகளை தாய்லாந்துக் குடியரசு ஆயுதப் படைகள் தலைமையகம் வழிநடத்தும்.
புதிய 10 கிலோமீட்டர் வேலி சா கயொ மாநிலத்தில் அமைக்கப்படும். அதற்கு 87 மில்லியன் பாட் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
போதுமான அரசாங்க நிதி இல்லாததால் புதிய வேலிக்கு எவ்வளவு தொகை ஒதுக்கவேண்டும் என்பது ஆராயப்பட்டு வருகிறது. எனினும், திட்டத்துக்கு நிதியுதவி வழங்குவது உறுதியான உடனேயே வேலியை எழுப்பும் பணிகளைத் தொடங்கலாம்.