சுரின் (தாய்லாந்து): கம்போடியாவும் தாய்லாந்தும் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) ஒன்றின் மீது மற்றொன்று பெரிய அளவில் பீரங்கித் தாக்குதல் நடத்திக்கொண்டன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் காணாத அளவில் இருதரப்புக்கும் இடையே மூண்ட சண்டை இரண்டாம் நாளாகத் தொடர்கிறது. தென்கிழக்காசிய வட்டாரம் உள்ளிட்ட தரப்புகள் சண்டையை உடனடியாக நிறுத்துமாறு குரல் கொடுத்து வருகின்றன.
கம்போடிய-தாய்லாந்து எல்லையில் தொடரும் பூசலில் இதுவரை குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டு விட்டனர்.
வெள்ளிக்கிழமை சூரிய உதயத்துக்கு முன்பிருந்தே இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் தொடர்வதாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது. உபொன் ரட்சத்தானி, சுரின் மாநிலங்களில் மோதல் ஏற்பட்டதாக தாய்லாந்து ராணுவம் குறிப்பிட்டது.
பீரங்கிகள், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பிஎம்-21 (BM-21) ரக ஏவுகணைகள் ஆகியவற்றை கம்போடியா பயன்படுத்தியதாக தாய்லாந்து ராணுவம் சொன்னது. சண்டை தொடரும் தாய்லாந்துப் பகுதியிலிருந்து 100,000 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கிய சண்டைக்கு இரு தரப்பும் ஒன்றை மற்றொன்றைக் காரணம் காட்டி சாடிவருகின்றன. சிறிதளவில் இருந்த சண்டை, குறைந்தது ஆறு இடங்களில் கடும் தாக்குதல்களாக மாறின. சண்டை தொடரும் பகுதி, இரு தரப்பும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தம் கொண்டாடிவரும் சர்ச்சைக்குரிய பகுதியாகும்.
சுரின் மாநிலத்தில் உள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள், வெள்ளிக்கிழமையன்று அப்பகுதியில் இடைவெளியுடன் கடும் வெடிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். பெரும்பாலும் வேளாண் நிலமாக இருக்கும் சம்பந்தப்பட்ட பகுதியில் ஆயுதம் ஏந்திய தாய்லாந்து ராணுவ வீரர்கள் சாலைகளிலும் பெட்ரோல் நிலையங்களிலும் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை (ஜூலை 23) கம்போடியாவுக்கான தனது தூதரை தாய்லாந்து, நாடு திரும்பச் சொன்னது. அதற்கு மறுநாள் சண்டை மோசமடைந்தது.