பேங்காக்: கடலோரப் பகுதிகளில் எரிசக்தி தொடர்பில் ஆய்வு மேற்கொள்வது குறித்து கம்போடியாவுடன் செய்துகொண்டிருந்த 25 ஆண்டுப் பழைமையான உடன்பாட்டை தாய்லாந்து அமைச்சரவை செவ்வாய்க்கிழமை (மே 5) ரத்து செய்தது.
தாய்லாந்து வளைகுடாப் பகுதியில் ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்து கூட்டாக ஆய்வு மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க 2001ஆம் ஆண்டில் அவ்விரு நாடுகளும் உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
அப்பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடிவரும் நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டில் அவை ஆயுதம் கொண்டு மோதிக்கொண்டன.
அந்த எரிசக்தி ஆய்வு உடன்பாடு ரத்து செய்யப்படும் என்று தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் தேர்தல் பரப்புரையின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், “உடன்பாடு ரத்து செய்யப்பட்டதற்கும் கம்போடியா உடனான எல்லைப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை. அந்த உடன்பாடு கையெழுத்தாகி 25 ஆண்டுகளாகிவிட்டபோதும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை,” என்று செய்தியாளர்களிடம் திரு அனுட்டின் தெரிவித்தார்.
இதுகுறித்து கம்போடியாவிற்கும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இந்நிலையில், உடன்பாட்டை ரத்துசெய்யும் தாய்லாந்தின் முடிவு வருத்தமளிப்பதாகக் கம்போடிய வெளியுறவு அமைச்சர் பிராக் சொக்கோன் தெரிவித்தார்.
அதே வேளையில், உடன்பாட்டை ரத்துசெய்யும் தாய்லாந்தின் முடிவானது கடல்துறைப் பகுதிகளில் கம்போடியாவின் சட்டபூர்வ உரிமைகளைப் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

