கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவிய அண்மைய ஆயுதமேந்திய சண்டை வட்டார அமைதிக்கு மட்டுமல்ல, ஆசியானின் நம்பகத்தன்மைக்கும் ஒரு பின்னடைவு என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அந்த எல்லை பூசல் நெருக்கடிகளைத் தவிர்க்கவும் சமாளிக்கவும் ஆசியானுக்கு இருக்கும் திறன் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்ற அவர், அத்தகைய சர்ச்சைகள் தென்கிழக்காசியாவுக்குப் புதிதல்ல என்றபோதும் வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று வலியுறுத்தினார்.
வன்முறை வெடிக்கும்போது தலைமைத்துவத்தின் தோல்வியையே அது சுட்டுகிறது என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார். வட்டாரத்தில் ஏற்கெனவே புவிசார் அரசியல் பதற்றம் நிலவுவதுடன் அனைத்துலகப் பொருளியலிலும் விரிசல்கள் இருப்பதால் வன்முறைகள் மோசமாவதைத் தடுக்கவேண்டும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் எச்சரித்தார்.
சிங்கப்பூரின் அனைத்துலக விவகாரங்களுக்கான கழகம் ஏற்பாடு செய்த 17வது ஆசியான், ஆசிய மாநாட்டில் பேசிய டாக்டர் பாலகிருஷ்ணன், கம்போடியா-தாய்லாந்து சண்டை ஆசியானுக்கு ஒரு பெரும் பின்னடைவு என்றார்.
வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாத எல்லைப் பூசல்கள் நிலவுகின்றன என்ற அவர், அத்தகைய பூசல்கள் வன்முறையில் முடியவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்.
நாடுகள் முதலில் அவற்றின் சமூகங்களைப் பார்த்துக்கொள்வதுதான் தீர்வு என்ற டாக்டர் பாலகிருஷ்ணன் வெளிநாட்டுக் கொள்கை சொந்த நாட்டிலிருந்துதான் தொடங்குகிறது என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டில் உள்ள பாதுகாப்பற்ற சூழலும் கட்டமைப்புகள்மீதுள்ள நம்பிக்கை குறைந்ததாலும் உலகமயமாதல், வர்த்தகம் ஆகியவை எதிர்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“வீட்டு விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால், பொருளியல் அல்லது இருதரப்பு கொள்கைகளுக்குத் தீர்வுகாண்பது மிக சிரமம்,” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஆசியான் அனைத்து தரப்பினருடனும் கலந்துபேசி பன்முகத்தன்மையில் நீக்குப்போக்கைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று டாக்டர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.