தாய்லாந்து கம்போடிய சண்டை தொடர்கிறது

2 mins read
dd8ee34e-14f5-4044-8853-936ee43ef8eb
ஆளில்லா வானூர்த்தியில் (ட்ரோன்) இருந்து எடுக்கப்பட்ட படத்தில் கம்போடிய எல்லையில் உள்ள துமார்டார் நகரின் கட்டடத்தில் குண்டு போடப்பட்டு புகை எழுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்/நோம்பென்: பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக தாய்லாந்தும் கம்போடியாவும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டும் இவ்வேளையில், இருநாட்டு எல்லைப் போர் நான்காம் நாளாகத் தொடர்கிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அமைதியை நிலைநாட்ட வியாழக்கிழமை (டிசம்பர் 11) தொலைபேசிpயல் அழைக்கப்போவதாக அறிவித்தும் தென்கிழக்காசியாவின் அங்கமான தாய்லாந்தும் கம்போடியாவும் அதனை பொருட்படுத்தவில்லை.

ஏவுகணைகள், குண்டுகள் என சுமார் 817 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியில் இருக்கும் பத்து வட்டாரங்களில் புதன்கிழமையன்று ஆயுதப் போர் தீவிரமடைந்து, இது அண்மைய வரலாற்றில் மிகமோசமானப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் நடந்த ஐந்து நாள் போர், அதிபர் டிரம்ப் வலியுறுத்திய பிறகு அமைதியடைந்தது. அச்சமயம் மலேசியப் பிரதமர் அன்வாரும் ஆசியான் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் அமைதிக்கு ஒத்துழைக்கும்படி இருநாடுகளையும் கேட்டுக்கொண்டிருந்தார்.

அக்டோபர் வரை அமைதியாக இருந்த எல்லையில் மீண்டும் பூசல் தொடங்கியிருப்பதால் இம்முறை அமெரிக்கா, மலேசியா ஆகிய நாடுகளின் சமரசத்தை ஏற்கப்போவதில்லை என்பதில் தாய்லாந்து கவனமாக இருப்பதாக அறியப்படுகிறது.

சண்டையில் சம்பந்தப்பட்டுள்ள இருநாடுகள் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதில் தாய்லாந்து உறுதியாக உள்ளது.

வீடுகள், பள்ளிகள், சாலைகள், வழிபாட்டுத் தலங்கள் என கம்போடியாவின் உள்நாட்டுப்பகுதியில் 30 கிலோ மீட்டர்வரை தாய்லாந்து ஊடுறுவி விமானத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக கம்போடிய உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

இதுவரை கம்போடியாவில் ஒரு குழந்தை உள்பட10 பேர் மாண்டுள்ளனர், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எட்டு வீரர்கள் மடிந்துள்ளதாகவும் 80 பேர் காயமடைந்துள்ளதாகவும் தாய்லாந்து ராணுவம் அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இரு நாடுகளின் எல்லைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்