தாய்லாந்து, கம்போடிய அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது

2 mins read
f9a5c9d4-10c5-4553-8adf-dd8820227111
கடந்த புதன்கிழமை (டிசம்பர்24) தாய்லாந்து, கம்போடிய ராணுவ அதிகாரிகள் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். - படம்: கம்போடிய அரசாங்க ஃபேஸ்புக்

பேங்காக்: தாய்லாந்து, கம்போடிய ராணுவ அதிகாரிகள் சண்டை நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையை புதன்கிழமை (டிசம்பர் 24) சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கியுள்ளனர்.

ராணுவத் தளபதிகள் அந்த அமைதிப் பேச்சில் தலைமை வகிக்கின்றனர் என்று கம்போடிய தற்காப்பு அமைச்சு அதுபற்றிய விவரங்களை உறுதிப்படுத்தியது.

இரண்டு நாடுகளும் கடந்த இருவாரங்களுக்கும் மேலாக எல்லைப் பகுதிகளில் சண்டையிட்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. மலேசியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பலமுறை சண்டையை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டபோதும் அவை உடன்படவில்லை.

தென்கிழக்காசிய நாடுகளின் (ஆசியான் கூட்டமைப்பு) வெளியுறவு அமைச்சர்கள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஒரு சிறப்புக் கூட்டத்தை திங்கட்கிழமை (டிசம்பர் 22) நடத்திய பிறகு இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.

தாய்லாந்து தற்காப்பு அமைச்சின் பேச்சாளரும் ராணுவ உயர் அதிகாரியுமான சுரசன்ட் கொங்சிரி, பொது எல்லைக் குழு என்ற அமைப்பின் அந்த அமைதிப் பேச்சுவார்த்தை மூன்று நாட்களுக்குத் தொடரும் என்று கூறினார். அதன்பிறகு உடன்பாடு ஏற்படுவதற்கான வழி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இருநாட்டு எல்லை 817 கிலோமீட்டர் நீளமுடையது. அதன் தென் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன.

“பொது எல்லைக் குழு அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கையை எட்டினால், வருகின்ற சனிக்கிழமை (டிசம்பர் 27) இருநாட்டு தற்காப்பு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெறும்,” என்று திரு சுரசன்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஆசியான் அமைப்பு வழிகாட்டியபடி ஜூலை மாதம் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் அண்மையில் பூசல் மீண்டும் தொடங்கியதற்கு தாய்லாந்தும் கம்போடியாவும் ஒன்றை ஒன்று காரணம் என குற்றம் சாட்டிவருகின்றன.

எல்லைத் தகராறு பல்லாண்டுகளாக தாய்லாந்து, கம்போடிய உறவில் விரிசலை ஏற்படுத்திவந்துள்ளது. டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து லாவோஸ் எல்லைக் காடுகள் உள்ள பகுதிகளிலும், தாய்லாந்தின் வளைகுடா கடலோரம் வரையிலும் ஆயுதத் தாக்குதல் நடந்தது.

இதுவரை 21 பொதுமக்கள் கம்போடியாவில் மாண்டுள்ளனர், 500,000பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அதன் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. தாய்லாந்தில் 65பேர் உயிரிழந்த நிலையில் 150,000 பேர் இல்லங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்