போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியதாக கம்போடியாமீது தாய்லாந்து புகார்

1 mins read
27e78273-2c6b-40f2-9d3d-a6b741f6097c
கம்போடியாவின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் தாய்லாந்து பதில் தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என அந்நாடு எச்சரித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6ஆம் தேதி) தாய்லாந்து எல்லைப் பகுதியைக் கம்போடியா தாக்கியதாகத் தாய்லாந்து ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

அத்தாக்குதலில் தாய்லாந்து வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.

கம்போடியா போர்நிறுத்தத்தை மீறி, தாய்லாந்தின் உபோன் ரட்சதானி வட்டாரத்தில் தாக்குதல் நடத்தியதாக ஜனவரி 6ஆம் தேதி தாய்லாந்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கம்போடியாவின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் தாய்லாந்து பதில் தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என அந்நாடு எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, சண்டை நிறுத்த உத்தரவை மீறியதாகத் தாய்லாந்து சுமத்திய குற்றச்சாட்டை மறுத்த கம்போடியா, குவியலாகக் கிடந்த குப்பையில் வெடிப்புச் சம்பவம் நடந்ததாகக் கூறியது.

மேலும், அச்சம்பவத்தில் தங்கள் நாட்டு வீரர் இருவர் காயமடைந்திருப்பதாகவும் அது தெரிவித்தது.

இதுதொடர்பாகத் தாய்லாந்து ராணுவப் பிரிவைத் தொடர்புகொண்ட கம்போடிய ராணுவம், தாய்லாந்து எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் நோக்கம் இல்லை எனக் கூறியதாகத் தாய்லாந்து வெளியிட்ட மற்றோர் அறிக்கையில் குறிப்பிட்டது.

மேலும், இந்தச் சம்பவம் கம்போடிய வீரர்களின் செயல்பாட்டுப் பிழையால் ஏற்பட்டதாகக் கம்போடியா கூறியதாகவும் அது சொன்னது.

குறிப்புச் சொற்கள்