பேங்காக்: இணைய மோசடியில் ஈடுபடும் நிலையங்களைக் குறிவைத்து தாய்லாந்து தனது எல்லையில் உள்ள மியன்மார் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின்சார இணைப்பை துண்டிக்க முடிவு செய்துள்ளது.
தாய்லாந்து எல்லைப் பகுதியில் இணைய மோசடியில் ஈடுபடும் சட்டவிரோதக் குடியிருப்புகளால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவது தெரியவந்துள்ளது. இதனால், இந்தக் குற்றக் கும்பல்கள்மீது நடவடிக்கை எடுக்க தாய்லாந்துக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து தாய்லாந்து அரசு அங்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்கும் முடிவை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4ஆம் தேதி) எடுத்ததாகக் கூறப்படுகிறது.
பல நூறாயிரம் பேர் குற்றக் கும்பல்களால் கடத்தப்பட்டு இணைய மோசடி நிலையங்களில், தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதிகள் உட்பட, வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் என ஐநா தெரிவிக்கிறது. இந்த மோசடிக் கும்பல்களின் செயல்கள் ஆண்டுக்கு பல பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
“அங்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று தாய்லாந்து துணைப் பிரதமர் பும்தாம் வீசாயாச்சை செய்தியாளர்களிடம் சொன்னார். அத்துடன், இதன் தொடர்பில் அங்குள்ள மாநில மின்சார ஆணையத்துக்கு இது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.