பேங்காக்: தாய்லாந்தின் விசா விதிமுறைகளில் முன்னுரைக்கப்பட்ட மாற்றங்களை அந்நாட்டின் அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
நீண்டகாலக் குடியிருப்பு அனுமதிகளைப் பெற, திறன்வாய்ந்த நிபுணர்கள், முதலீட்டாளர்கள், பணக்கார வெளிநாட்டவர்கள் ஆகியோரை மேலும் ஈர்ப்பதே அதன் நோக்கம்.
பணக்கார உலகக் குடிமக்கள் பிரிவில் விசா நாடுவோருக்குக் குறைந்தபட்ச வருடாந்தர வருமானத் தகுதிநிலையை அகற்றுவது மாற்றங்களில் அடங்கும். ஊழியர்களை தாய்லாந்திலிருந்து பணிபுரிய அனுமதிக்கும் நிறுவனங்களின் குறைந்தபட்ச வருவாய் தகுதிநிலையும் குறைக்கப்படும்.
நீண்டகாலக் குடியிருப்பு அனுமதி விசா வைத்திருப்போர், இனி அவர்கள் தாய்லாந்திற்கு அழைத்துவரும் சார்ந்திருப்போரின் எண்ணிக்கையில் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் எதிர்நோக்கமாட்டார்கள் என்று அத்திட்டத்தை மேற்பார்வையிடும் முதலீட்டு வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
பெற்றோரும் சட்டப்படி அனுமதிக்கப்படும் மற்ற சார்ந்திருப்போரும் விசா வைத்திருப்போருடன் தங்கலாம். முன்னதாக, சார்ந்திருப்போரில் நால்வருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
முதன்முதலாக 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தாய்லாந்தின் நீண்டகாலக் குடியிருப்பு அனுமதி விசாத் திட்டம், விண்ணப்பதாரர்களுக்குப் பத்தாண்டு குடியிருப்புத் தகுதி, மின்னிலக்க வேலை அனுமதி, தனிநபர் வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட அனுகூலங்களை வழங்குகிறது. கிருமித்தொற்றுக்குப் பிந்திய காலகட்டத்தில் பொருளியலை வலுவாக்கும் ஒரு வழிமுறையாக அது கருதப்பட்டது.
அந்த வசதியை 6,000க்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தியுள்ளனர். அந்த வரிசையில் ஐரோப்பியர்கள் முதல் நிலையில் உள்ளனர்.
‘‘மேலும் அனைவரையும் உள்ளடக்கும் போட்டித்தன்மைமிக்க அணுகுமுறையை உறுதிசெய்வதன் மூலம், இந்த மாற்றங்கள் முதலீட்டுக்கும் அதிக திறன்வாய்ந்தவர்களுக்குமான உலக நடுவமாக தாய்லாந்தின் நிலையை மேலும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,’’ என்று முதலீட்டு வாரியத்தின் தலைமைச் செயலாளர் நாரிட் தெர்ட்ஸ்டீரசுக்டி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘‘சுமுகமான விசா நடைமுறைகள் நாம் கவனம் செலுத்தும் அம்சங்களின் முக்கியப் பகுதியாக விளங்குகின்றன,’’ என்றார் அவர்.
‘‘தாய்லாந்தில் ஒட்டுமொத்தச் சொத்து மற்றும் முதலீடுகளின் முக்கியத் தகுதிநிலைக்கு முன்னுரிமை அளிக்க, பணக்கார உலகக் குடிமக்களுக்கான குறைந்தபட்ச வருடாந்தர வருமானத் தகுதிநிலை அகற்றப்பட்டுள்ளது.
‘‘இந்த நடவடிக்கை, நாட்டில் மேலும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது,’’ என்று வாரியம் கூறியது.