தாய்லாந்து தேர்தல்; மக்கள் வாக்களிப்பு

தாய்லாந்து தேர்தல்; மக்கள் வாக்களிப்பு

2 mins read
33273204-79b4-4ec2-b642-ad7934a68289
பியூ தாய் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யோட்சனான் வோங்சாவட் வாக்களித்த பிறகு செல்கிறார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்து வாக்காளர்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) பெருமளவில் திரண்டு பொதுத் தேர்தலில் வாக்களித்தனர். இடைக்காலப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் தலைவராக இருக்கும் பூம்ஜாய்தாய் கட்சி, முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் பியூ தாய் கட்சி, முன்னேற்ற மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் எந்தவொரு கட்சியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறுவது சாத்தியமில்லை என்று கணிப்புகள் தெரிவித்தன.

வாக்கு எண்ணிக்கை முடிந்து சிங்கப்பூர் நேரப்படி இரவு 11 மணி அளவில் முடிவுகள் வெளிவரத் தொடங்கும் என்று கூறப்பட்டது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையேயான கடுமையான எல்லைப் பூசலின் மத்தியில், பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் டிசம்பர் நடுப்பகுதியில் திடீர்த் தேர்தலை அறிவித்தார்.

பொருளியல், கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினை ஆகிய இரண்டு முக்கியப் பிரச்சினைகளை மனத்தில் கொண்டு மக்கள் வாக்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 60 அரசியல் கட்சிகள் கீழவையின் 500 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிடுகின்றன.

தாய்லாந்தின் 76 மாகாணங்களிலும் அதன் தலைநகர் பேங்காக்கிலும் கிட்டத்தட்ட 53 மில்லியன் மக்கள் உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களித்தனர். இதில் 2.3 மில்லியன் இளையர்கள் முதல் முறையாக வாக்களித்தனர்.

அவர்களில் ஒருவர் 20 வயது மாணவி அச்சினடா லிம்லியர்ட்ஃபோலாபூன், எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்று தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.

ஆனால் அடுத்த அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

“விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உணர்கிறேன். தாய்லாந்து மக்களின் சம்பளம் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக இல்லை,” என்று அவர் கூறினார்.

முதல் முறையாக வாக்களித்த மற்றொரு இளையரான 21 வயது ரன்லாரிஸ் பஞ்சவன், கட்சிகளின் கொள்கைகளையும் வேட்பாளர்களின் அனுபவத்தையும் கருத்தில் கொள்வதாகக் கூறினார்.

இந்தப் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கான சாத்தியமில்லை என்று அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர். மீண்டும் ஒரு கூட்டணி அரசாங்கம் உருவாகும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்