பேங்காக்: தாய்லாந்து கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
பருவநிலை மாற்றம், எல் நினோ சூழல் ஆகியவற்றால் ஏற்கெனவே சேமித்துவைத்திருந்த தண்ணீரைத் தாய்லாந்து விநியோகம் செய்துவருவதால் தண்ணீர்ப் பற்றாக்குறை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.
எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை அதிகரிப்பதுடன் மழை பெய்வதும் குறைவதால் நீர்வளத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் நிலைக்குத் தாய்லாந்து தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நீர்ப் பற்றாக்குறையை நோக்கி உலகம் சென்றுகொண்டிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது. உலக அளவில் நிலத்தடி நீர் கிட்டத்தட்ட 70 விழுக்காடுவரை நிரந்தரமாகக் குறைந்துவிட்டதால் 2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நிறுவனம் சுட்டியது.
உலக அளவில் உள்ள சதுப்புநிலங்களின் பரப்பரளவும் கிட்டத்தட்ட 4.1 மில்லியன் சதுர கிலோமீட்டராகக் குறைந்துவிட்டது. 1970ஆம் ஆண்டிலிருந்து பனிப்பாறைகளின் அளவும் 30 விழுக்காட்டுக்கும் அதிகமாகக் குறைந்துவிட்டது.
அனைத்துலக அளவில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டு உணவு உற்பத்தி, நீர்வளம் குறைந்துள்ள இடங்களில் உள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் குறிப்பிட்டது.
இந்நிலையில், 41 மாநிலங்களில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தாய்லாந்தின் தேசிய நீர்வள அலுவலகம் தெரிவித்துள்ளது.
12 மாநிலங்களில் வேளாண்மைக்குத் தேவையான நீர்ப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் 22 முக்கிய ஆற்றுப்படுகைகளில் நீரின் தரம் பாதிக்கப்படக்கூடும் என்றும் அலுவலகம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
கடல்நீர்க் கசிவால் குழாய் நீர் உற்பத்தி பாதிக்கப்படக்கூடும் என்பதால் கிழக்கு பேங்காக், நந்தாபுரி, சமுட் பிரகான் ஆகிய பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.
தாய்லாந்தில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் மக்கள் சிரமத்தை எதிர்கொள்ளலாம் என்றும் வேளாண்மை உற்பத்தி குறையக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
நீர் நிர்வாகம் பல மாநிலங்களில் குறுகிய காலத்துக்கும் நீண்டகாலத்துக்கும் மேம்படுத்தப்படவேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

