பேங்காக்: ஏறத்தாழ 200,000 மருந்துப் புட்டிகளைத் திரும்பப் பெறுவதாக தாய் ஹெர்பல்ஹோங் தாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் தயாரித்த ‘ஹோங் தாய் ஹெர்பல் இன்ஹேலர் ஃபார்முலா 2’ மருந்து மாசடைந்திருப்பது தெரியவந்ததை அடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாய் ஹெர்பல் ஹோங் தாய் நிறுவனம் தயாரித்த நாசித் துவாரங்கள் வழியாக உள்வாங்கிக்கொள்ளப்படும் மருந்து, நுண்ணுயிர்களால் மாசடைந்திருப்பதாகத் தாய்லாந்தின் உணவு, மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கண்டுபிடித்தது.
ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அளவைவிட அதிகமான நுண்ணுயிர் மருந்தில் கலந்திருப்பதாக நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்தது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதியன்று தயாரிக்கப்பட்டு 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதியன்று காலாவதியாகும் குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக தாய் ஹெர்பல் ஹோங் தாய் நிறுவனத்தின் நிறுவனர் திரு நீராபோங் ராபுவேதம் தெரிவித்தார்.
தனது நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளுக்கான தரக் கட்டுப்பாடுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

