பேங்காக்: தாய்லாந்தின் பிராச்சின்புரி பகுதியில் உள்ள வாட் போ தோங் கோயில் வளாகத்தில் வெள்ளநீர் புகுந்ததையடுத்து, அங்கிருந்த 400 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள முதலை பத்திரமாக வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இதனால் அப்பகுதிவாசிகளும் துறவிகளும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.
வெள்ளம் சூழ்ந்த வளாகத்திலிருந்து முதலையை இடமாற்றம் செய்ய உதவுமாறு செப்டம்பர் 27ஆம் தேதி பிற்பகலில் கோயிலிடமிருந்து சி மஹா போட் மாவட்ட அதிகாரி சுதாமஸ் புவாபுவானுக்குக் கோரிக்கை வந்தது.
அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறையினர், தொண்டூழியர்கள், உள்ளூர்வாசிகள் ஆகியோர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் முதலையின் வாயையும் கால்களையும் கயிறுகளால் கட்டி, சாலைக்குக் கொண்டுவந்தனர்.
பின்னர், சுமைதூக்கி மூலம் அது லாரியில் ஏற்றப்பட்டு, வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
நுவா தோங் எனப் பெயரிடப்பட்ட அந்த முதலைக்கு 27 வயதாகிறது. அது 4 மீட்டருக்கும் அதிகமான நீளமும் 400 கிலோவிற்கும் அதிகமான எடையும் கொண்டது.
வாட் போ தோங் கோயிலில் உள்ள முதலையின் வளாகத்தைச் சுற்றி கிட்டத்தட்ட 1.3 மீட்டர் உயரத்திற்கு வெள்ளநீர் ஓடியது. நீர்மட்டம் தொடர்ந்து கூடியதையடுத்து, அவ்வளாகத்திலிருந்து தப்பி முதலை பிராசின் புரி ஆற்றுக்குள் சென்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது.
அதனையடுத்து, அதனை இடமாற்றும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம் இறங்கியது.
