பேங்காக்: மியன்மாரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) நிகழ்ந்த நிலநடுக்கத்தில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கட்டப்பட்டு வந்த அரசு தணிக்கை அலுவலகக் கட்டடம் ஒன்று முழுமையாக சரிந்து விழுந்தது.
இது குறித்து கவலை தெரிவித்த தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடம் மட்டும் எப்படி இடிந்து விழுந்தது என்று கேள்வி எழுப்பிய தாய்லாந்துப் பிரதமர், இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடப் போவதில்லை என பொதுமக்களுக்கு உறுதியளித்தார். இது விசாரிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்று அவர் வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டார் தாய்லாந்துப் பிரதமர். அந்தக் குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தவர்களின் விவரம் ஆகியவற்றுடன் கட்டடத்தின் கட்டுமானம், அதன் வடிவமைப்புக்கு யார் பொறுப்பு ஆகியவை குறித்தும் முழுமையாக விசாரிக்குமாறு தாய்லாந்துப் பிரதமர் தெளிவான உத்தரவுகள் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணையை முடிக்க அவர் காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் இதுபோன்று பல கட்டடங்கள் உள்ள நிலையில், இதற்கு ஏற்பட்ட நிலை குறித்து விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது என தாய்லாந்துப் பிரதமர் விளக்கினார்.

