பேங்காக்: தாய்லாந்து, சர்ச்சைக்குரிய கம்போடிய எல்லைப் பகுதியில் ஆகாயத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தாய்லாந்து ராணுவம் திங்கட்கிழமை (டிசம்பர் 8) தெரிவித்தது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தலைமையில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருதரப்பும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்தன.
தாய்லாந்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் உபோன் ராட்சத்தானி மாநிலத்தில் இரு பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது ஒரு தாய்லாந்து ராணுவ வீரர் கொல்லப்பட்டார். குறைந்தது நால்வர் காயமுற்றதாக தாய்லாந்து ராணுவம் அறிக்கையில் தெரிவித்தது.
“தாய்லாந்து தரப்பு இப்போது பல்வேறு இடங்களில் (கம்போடிய) ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு இடங்களில் தங்களின் படைகள் மீது தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கம்போடியத் தற்காப்பு அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது. சில நாள்களாகத் தங்களைச் சீண்டும் செயல்கள் இடம்பெற்றதாகவும் தங்களின் படைகள் பதிலடி தரவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதல் ஐந்து நாள் போராக உருவெடுத்தது. பிறகு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் திரு டிரம்ப்பும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரைய உதவினர்.
பிறகு அக்டோபர் மாதம் விரிவுபடுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் தாய்லாந்தும் கம்போடியாவும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கையெழுத்திட்டன.
ஜூலையில் நடந்த மோதல்களில் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 300,000 பேர் தற்காலிகமாக வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற மாதம் நிலச்சுரங்க வெடிப்பினால் தங்களின் ராணுவ வீரர் ஒருவர் காயமுற்றதைத் தொடர்ந்து கம்போடியாவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை நிறுத்திவைப்பதாக தாய்லாந்து அறிவித்தது.
தாய்லாந்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களிலிருந்து 385,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் 35,000க்கும் அதிகமானோர் ஏற்கெனவே தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில், கம்போடியா, தாய்லாந்துக்கு இடையே ராணுவ ரீதியாக மோதல் ஏற்பட்டுள்ளது குறித்து திரு அன்வார் கவலை தெரிவித்துள்ளார். மறுபடியும் சண்டை வெடித்திருப்பது, அவ்விரு அண்டை நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த அரசதந்திர ரீதியான முயற்சிகளுக்குப் பங்கம் விளைவிக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
“மீண்டும் அமைதியைக் கொண்டு வரவும் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மலேசியா தயாராய் உள்ளது,” என்றார் திரு அன்வார்.
இந்த மோதல்கள் வட்டார நிலைத்தன்மைக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றன. தென்கிழக்காசியா, நீண்டகாலமாகத் தொடரும் பூசல்களை அடிக்கடி தலைதூக்கும் மோதல்களாக உருவெடுக்க விடக்கூடாது என்றும் திரு அன்வார் சுட்டினார்.

