பேங்காக்: தாய்லாந்து, மின்னிலக்க நாடோடிகளை (digital nomads) ஈர்க்கப் புதிய விசா ஒன்றைத் தொடங்கியுள்ளது.
வெளிநாட்டவரிடையே, தாய்லாந்தைச் சுற்றிப் பார்த்தபடி வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பது டிடிவி (Destination Thailand Visa) என்றழைக்கப்படும் அந்த விசாவின் நோக்கமாகும்.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சாங்கியம்பொங்சா கடந்த வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 19) புதிய விசாவைப் பற்றி அறிவித்தார். தாய்லாந்தில் கூடுதல் காலம் வசிக்க நினைக்கும் மின்னிலக்க நாடோடிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப டிடிவி விசா திட்டம் வரையப்பட்டுள்ளதாக திரு மாரிஸ் தெரிவித்தார்.
தாய்லாந்தில் வசித்தபடி வேலை செய்யும் வெளிநாட்டவரால் உள்ளூர் பொருளியலுக்குப் பங்காற்ற முடியும். உணவகங்கள், ஹோட்டல்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்டவற்றில் செலவு செய்வதன் மூலம் அவர்கள் உள்ளூர் பொருளியலுக்குப் பங்காற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புக்கெட்டில் உள்ள சில ஹோட்டல்கள், ஏற்கெனவே மின்னிலக்க நாடோடிகளுக்கென சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பதாக திரு மாரிஸ் குறிப்பிட்டார்.
டிடிவி விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் நடைமுறையில் இடையூறுகள் அதிகம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்யும் முறை எளிதானது. மேலும், அதன்கீழ் கூடுதல் காலம் தாய்லாந்தில் வசிக்கத் தெரிவு செய்யலாம்.
டிடிவி விசாவின்கீழ் ஒவ்வொரு முறையும் தாய்லாந்தில் 180 நாள்கள் வரை வசிக்கலாம். அதற்கு மேல் கூடுதலாக 180 நாள்களுக்கு ஏற்பாட்டை நீடிக்கவும் வாய்ப்புள்ளது.

