தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரட்டுகளைக் கட்டுப்படுத்த தாய்லாந்துக் கல்வியமைச்சு கடும் நடவடிக்கை

2 mins read
0a206aa3-1fb2-493b-a08a-0f265acd0c89
கடந்த ஆண்டு தாய்லந்தில் 100க்கும் அதிகமான பிள்ளைகள் மின்சிகரெட்டால் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகினர். - கோப்புப் படம்

பேங்காக்: தாய்லாந்துப் பள்ளிகளில் மின்சிகரெட்டுகள் கிடைப்பதைத் தடுக்க 4 புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டுக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மின்சிகரெட்டுகளுக்கு அடிமையான இளையர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 18 விழுக்காட்டுக்குக் கூடியதை அடுத்து கல்வியமைச்சு கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தது.

தாய்லாந்துச் சுகாதாரச் சேவை ஆதரவுப் பிரிவு, பொதுச் சுகாதார அமைச்சு, கல்வியமைச்சு, தாய்லாந்து இளையர்க் கழகம் நடத்திய ஆய்வில் மின்சிகரெட்டுகள் பற்றி பலருக்குத் தவறான கருத்துகள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஏறக்குறைய 61 விழுக்காட்டினர் மின்சிகரெட்டுகள் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட உதவும் என்று தவறாக நம்பினர்.

சுமார் 51.1 விழுக்காட்டினர் மின்சிகரெட்டுகளில் இருக்கும் நிக்கோட்டின் உடல்நலத்துக்கு நல்லது என்று நம்பினர்.

சிகரெட்டுகளில் இருக்கும் புகையிலையைவிட மின்சிகரெட்டுகளின் பாதிப்பு குறைவு என்று 50 விழுக்காட்டினர் கருதினர்.

மின்சிகரெட்டுகளைத் தாய்லாந்தில் பயன்படுத்த சட்டப்படி அனுமதி உண்டு என்று 23 விழுக்காட்டினர் தவறாக நினைத்தனர்.

தாய்லாந்தில் கடந்த ஆண்டு மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்திய 100க்கும் அதிகமான பிள்ளைகள் மோசமான நுரையீரல் வீக்கத்தால் அவதியுற்றதாகச் பொதுச் சுகாதார அமைச்சு எச்சரித்தது.

அதையடுத்து அனைத்து கல்விக் கழகங்களிலும் அமைச்சின் கண்காணிப்பின்கீழ் வரும் கட்டடங்களிலும் மின்சிகரெட்டுகள் கிடைப்பதைத் தடுக்கும் நடைமுறைகளை கல்வியமைச்சர் பெர்ம்பூன் சிட்‌சோப் (மார்ச் 10) அறிவித்தார்.

மாணவர்கள், அரசாங்க அதிகாரிகள், ஆசிரியர்கள் போன்றோருக்கு மின்சிகரெட்டுகளின் விளைவு, உடல்நலப் பாதிப்புகள் ஆகியவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அதில் அடங்கும்.

கல்விக் கழகங்களிலும் புகைபிடிப்பதற்குத் தடைசெய்யப்பட்ட பகுதிகள் உருவாக்கப்படும்.

புகைப்பிடித்தல், மின்சிகரெட்டுகளின் விற்பனை போன்ற மின்சிகரெட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இனி தீவிரமாகக் கண்காணிக்கப்படுவர்.

குறிப்புச் சொற்கள்