நோம் பென்: பிரச்சினைக்குரிய எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைத் தாய்லாந்து படைகள் ஆக்கிரமித்துள்ளதாகக் கம்போடியா குற்றஞ்சாட்டியுள்ளது.
சண்டை நிறுத்த உடன்பாடு நடப்பில் இருக்கும்போது தாய்லாந்தின் நடவடிக்கை குறித்து கம்போடியா அதிருப்தி தெரிவித்துள்ளது.
“தாய்லாந்து ராணுவம் கம்போடியாவின் எல்லையில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குறிப்பாக, சோக் சே கிராமத்தில் அத்துமீறல்கள் நடக்கின்றன,” என்று கம்போடியாவின் தகவல் அமைச்சு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்தது.
“பேங்காக்கின் நடவடிக்கையால் பொதுமக்களின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சர்ச்சைக்குரிய பகுதிகளில் கப்பல் கொள்கலன்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தாய்லாந்து தடுப்புகளை உருவாக்கியுள்ளது,” என்று அமைச்சு குறிப்பிட்டது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் தாய்லாந்து ராணுவம் தனது தேசியக் கொடியை நட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து தாய்லாந்துப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கம்போடியா கூறியுள்ளது.
எல்லையிலிருந்து 750 மீட்டர் தூரத்திலுள்ள கம்போடியப் பகுதிக்குள் தாய்லாந்து இருப்பதாக அமைச்சு எல்லை வரைபடத்தைச் சுட்டிக்காட்டியது.
கம்போடியாவின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தாய்லாந்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“தாய்லாந்துக்குச் சொந்தமான பகுதிகளைக் கம்போடியா ஆக்கிரமித்திருந்தது. அதை மீண்டும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்,” என்று தாய்லாந்து ராணுவம் கூறியது.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது. அண்மையில் அந்தப் பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையில் போரை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியது.
டிசம்பர் மாதத்தில் அடிக்கடி பூசல் எழுந்தது. இருநாட்டு எல்லைகளிலும் மாறிமாறி ராணுவத் தாக்குதல்கள் நடந்தன. இதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
அதையடுத்து வட்டார நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுத்தன. அதன் பின்னர் டிசம்பர் 27ஆம் தேதி சண்டை நிறுத்தப்பட்டது.

