பேங்காக்: புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு தாய்லாந்தின் உள்துறை அமைச்சு அந்நாடு முழுவதும் ஆளுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வாணவேடிக்கை, மிதக்கும் ‘லேன்டர்ன்’ விளக்குகளுக்குக் கடுமையான விதிமுறைகளை விதிப்பது, வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவதற்கு எதிரான நடவடிக்கை ஆகியவை முடுக்கிவிடப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளிலிருந்து புறப்படுவதற்கு முன்பு மின்சாரப் பொருள்களைக் கண்காணித்துவிட்டுச் செல்லுமாறு உள்துறை அமைச்சு, குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ‘ஷார்ட் சர்க்கிட்’ ஏற்படுத்தக்கூடிய மின்சாரப் பொருள்களைக் கழற்றி வைக்குமாறும் சமையல் எரிவாயுக் குழாய்களை மூடி வைக்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டது.
குடியிருப்பாளர்கள் வெளியே இருக்கும்போது கிராமங்களையும் சமூகங்களையும் பாதுகாத்துத் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க உள்ளூர் தற்காப்புத் தொண்டூழியர்கள், வட்டாரக் காப்பாளர்கள், காவல்துறையினர் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டுச் சுற்றுக்காவல் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படும்.
ஹோட்டல்கள், கேளிக்கை நிலையங்கள் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 20 வயதுக்குக்கீழ் உள்ளவர்களை உள்ளே வராமல் தடுப்பது, ஆயுதங்களுக்கும் போதைப்பொருள்களுக்கும் கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்டவை அந்நடவடிக்கைகளில் அடங்கும்.

