பேங்காக்: அமெரிக்கா சில கஞ்சா தயாரிப்புகள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதையடுத்து, மருத்துவக் கஞ்சாவை நாட்டின் சுகாதாரப் பொருளியலுக்குள் கொண்டு வர தாய்லாந்தின் பொதுச் சுகாதார அமைச்சு தயாராகி வருகிறது.
மருத்துவக் கஞ்சாவை மருத்துவ மற்றும் சுகாதாரப் பொருளியலை நோக்கிய ஒரு பாதையாக மாற்ற தாய்லாந்து கவனம் செலுத்தும் என்று பொதுச் சுகாதார அமைச்சர் பட்டானா புரோம்பாட் கூறினார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம் சில கஞ்சா தயாரிப்புகளின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி அவற்றின் அபாய வகைப்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுத்ததையடுத்து, அமெரிக்கக் கஞ்சாத் தொழில் ஒரு முக்கிய திருப்புமுனையாக விவரிக்கப்படும் நிலைக்குள் நுழைந்துள்ள வேளையில் அவரது இந்தக் கருத்துகள் வந்துள்ளன.
சில கஞ்சா தயாரிப்புகளைக் கூட்டரசு சட்டத்தின்கீழ் குறைவான ஆபத்து கொண்டவையாக மறுவகைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க நீதித்துறை ஏப்ரல் 23ஆம் தேதியன்று அறிவித்தது.
இந்த மாற்றமானது நாடு முழுவதும் கஞ்சாவைச் சட்டபூர்வமாக்கவில்லை என்றபோதிலும் பல ஆண்டுகளில் அமெரிக்கக் கஞ்சா கொள்கையில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சட்டபூர்வமான கஞ்சா சந்தை 2026ஆம் ஆண்டில் 47 பில்லியன் அமெரிக்க டாலரைத் (S$59.8 பில்லியன்) தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய நிலைமைகளுக்கு ஏற்ப அதன் கட்டமைப்பைக் கொண்டுவருவதற்காக, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் சட்டமியற்றல் திருத்தங்கள் உள்ளிட்ட சட்டரீதியான மாற்றங்களை தாய்லாந்து ஏற்கெனவே தயார் செய்து வருவதாக திரு பட்டானா கூறினார்.
கஞ்சா தொடர்பான சட்டங்களை உருவாக்குவது மற்றும் இந்தத் துறையை ஒரு பொருளியல் அமைப்பாக மாற்றுவது ஆகியவை கவனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
பல நாடுகள் இன்னும் கஞ்சாக் கொள்கையைக் கவலையுடன்தான் பார்க்கின்றன என்று அவர் கூறினார். எனவே தாய்லாந்தின் அணுகுமுறை அனைத்துலக ஏற்பைப் பெற வேண்டும், அத்துடன் கஞ்சா சென்றடையும் நாடுகளில் தயாரிப்புகள் சட்டவிரோதமானதாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

