மியன்மார் கனிமச் சுரங்க ரசாயன ஏற்றுமதியைத் தடுக்கத் தாய்லாந்து திட்டம்

மியன்மார் கனிமச் சுரங்க ரசாயன ஏற்றுமதியைத் தடுக்கத் தாய்லாந்து திட்டம்

படம்: ராய்ட்டர்ஸ்

23 Nov 2026 - 11:52 am

1 mins read

பேங்காக்: மியன்மாரில் அரியவகைக் கனிமச் சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன வகைகளை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தத் தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.

தாய்லாந்தின் துணைப் பிரதமர் யோட்சானான் வோங்சாவாட் சனிக்கிழமை (நவம்பர் 21) இதைத் தெரிவித்தார். மியன்மாரிலும் சம்பந்தப்பட்ட மற்ற நாடுகளிலும் அரியவகைக் கனிம உற்பத்தியைக் குறிவைத்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதுபற்றி அவர் மேல்விவரங்களை வழங்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பில் செவ்வாய்க்கிழமையிலிருந்து வியாழக்கிழமை வரை (நவம்பர் 24-26) பேச்சுவார்த்தை நடத்த தாய்லாந்து, சீனா, மியன்மார் மூன்றும் திட்டமிட்டுள்ளதாகத் தாய்லாந்து அரசாங்கம் கூறியது.

மியன்மாரில் அரியவகைக் கனிமங்களுக்கான சுரங்கப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதற்கும் வட தாய்லாந்தில் உள்ள ஆறுகள் மாசுபடுவதற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

நச்சுக் கலப்பைக் கையாள தாய்லாந்து எல்லைக்குள் இருக்கும் கொக் ஆற்றுப் பகுதியை மாசுக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கத் தாங்கள் திட்டமிட்டிருப்பதாகத் தாய்லாந்து அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) தெரிவித்தது.

சாய், கொக், மெக்கோங் ஆறுகளில் ரசாயனம், உலோகங்கள் கலக்கப்படும் பிரச்சினையைக் கையாளத் தாய்லாந்து, மியன்மாரின் கனிம ஏற்றுமதியையும் சுரங்கப் பணிகளுக்கான பொருள்கள் விநியோகத்தையும் உன்னிப்பாகக் கண்காணிக்கவேண்டும் என்று முன்னதாகக் குரல் கொடுக்கப்பட்டது. மே ஃபா லுவாங் பல்கலைக்கழகத்தின் சமூகப் புத்தாக்கப் பள்ளியைச் சேர்ந்த விரிவுரையாளர் டாக்டர் சுவெப்சாக்குன் கிட்னுக்கோர்ன் போஸ்ட் டுடே ஊடகத்திடம் அவ்வாறு கூறியதாக த நே‌ஷன் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

குறிப்புச் சொற்கள்