பேங்காக்: தாய்லாந்து அரசாங்கம், அந்நாட்டில் விசா இன்றி தங்கும் காலத்தை 30 நாள்களாகக் குறைப்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
மோசடி தொடர்பான முறைகேடுகளைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விசா காலத்தைக் குறைக்க அரசு விரும்புகிறது.
விசா இன்றி தாய்லாந்தில் 60 நாள்கள் வரை தங்கலாம். இந்நிலையில் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கானத் தங்கும் காலத்தை 30 நாள்களாகக் குறைக்க தாய்லாந்து தயாராகி வருகிறது. சுற்றுலாத் துறையை கட்டிக்காக்கும் அதே சமயத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
இது குறித்துப் பேசிய இடைக்கால வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோவ், விசா இன்றி தங்கும் கொள்கை ஸ்ரேத்தா தவிசின் நிர்வாகத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.
தாய்லாந்துப் பொருளியலுக்கு முக்கியப் பங்காற்றும் சுற்றுலாவுக்கு ஆதரவாக அந்தக் கொள்கை கொண்டுவரப்பட்டது. அதன்படி, தகுதிபெற்ற வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்காக அல்லது வணிக நோக்கங்களுக்காக முன்பே விசாவுக்கு விண்ணப்பிக்காமல் தாய்லாந்துக்குள் நுழைய முடியும்.
இருப்பினும், வெளியுறவு அமைச்சின் தலைமையில் கூடிய விசா குழு, பெரும்பாலான பயணிகளுக்கு 60 நாள் தங்குதல் என்பது தேவையைவிட நீண்டகாலமாக இருக்கலாம் என்றும் உரிய விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்குவது முறைகேடுகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் முடிவுசெய்துள்ளது.
இதையடுத்து, தங்கும் காலத்தைக் குறைப்பதற்கான உத்தேசத் திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வருகிறது. அனைத்துலகப் பயணிகள் விசா காலத்தை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்க விண்ணப்பிக்க முடியும்.
இணைய மோசடிக் கும்பல்களைச் சமாளிக்க விசா மாற்றம் உதவும் என்று அமைச்சர் சிஹாசக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சில தனிப்பட்டவர்கள் நீண்டகால விசாவைப் பயன்படுத்தி தாய்லாந்துக்குள் நுழைந்து பின்னர் அண்டை நாடுகளுக்குப் பயணம் செய்வதை தாய்லாந்து அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதில் சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

