பேங்காக்: தாய்லாந்து பிரதமர், பல மில்லியன் டாலர் மதிப்பிலான கைக்கடிகாரங்களையும் கைப்பைகளையும் வைத்துள்ளார்.
பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத்ரா தன்னிடமுள்ள சொத்துகளின் விவரங்களை பகிரங்கமாக அறிவித்துள்ளார்
ஏறக்குறைய 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகள் தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவற்றில் 162 மில்லியன் பாட் (US$4.70 மில்லியன்) மதிப்பிலான விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், 76 மில்லியன் பாட் (US$2.26 மில்லியன்) மதிப்பிலான ஆடம்பரக் கைப்பைகள் அடங்கும்.
முன்னாள் பிரதமரும் தொலை தொடர்பு நிறுவன உரிமையாளரும் பெரும் செல்வந்தருமான தக்சின் ஷினவாத்தின் இளைய மகளான பெடோங்டார்ன் கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அவர் தனது சொத்துகளையும் கொடுக்க வேண்டிய கடன்களையும் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
இதையடுத்து தனக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகள் இருப்பதை அவர் அடையாளம் கண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட ஆவணம் தெரிவிக்கிறது.
அவருக்கு 11 பில்லியன் பாட் (S$437.2 மில்லியன்) மதிப்பில் முதலீடுகள் உள்ளன. மேலும் ஒரு பில்லியன் மதிப்பிலான முதலீடுகளையும் ரொக்கத்தையும் அவர் வைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவரது இதர சொத்துகளில் 162 மில்லியன் பாட் மதிப்புள்ள 75 கைக்கடிகாரங்கள் மற்றும் 39 கடிகாரங்கள், 76 மில்லியன் பாட் மதிப்புள்ள 217 கைப்பைகள் மற்றும் லண்டன் மற்றும் ஜப்பானில் உள்ள சொத்துக்கள் ஆகியவை அடங்கும்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆவணப்படி ஏறக்குறைய ஐந்து பில்லியன் பாட் கடன் அவருக்கு உள்ளது.
இந்நிலையில் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்த பெடோங்டார்ன் சொத்துகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் துல்லியமானவை என்று பியூ தாய் கட்சியின் பிரதிநிதி ஒருவர் ஏஎஃப்பியிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பிரதமரின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தக்சினின் நிகர மதிப்பு 2.1 பில்லியன் டாலர் என்று ஃபோர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தாய்லாந்தின் 10வது பெரும் பணக்காரராக தக்சின் உள்ளார்.

