பேங்காக்: தாய்லாந்தில் மறைந்த இளவரசி பஜ்ரகிட்டியாபாவின் உடல் வந்து சேர்ந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) நூற்றுக்கணக்கான மக்கள் கறுப்பு உடையணிந்து பேங்காக்கில் உள்ள அரண்மனையில் அஞ்சலி செலுத்தினர்.
இளவரசி பா என்று மக்களால் அழைக்கப்படும் பஜ்ரகிட்டியாபா, 47வது வயதில் வியாழக்கிழமை (ஜூன் 11) காலமானார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கோமாவிலிருந்த அவர் அதிலிருந்து கடைசி வரை மீளவில்லை.
“இளவரசியின் உடல் வரும் வரை காத்திருப்பேன்,” என்று ஆங்கில ஆசிரியரான 54 வயது டோனாபா கிளாட்புபா கூறினார்.
டோனாபா இருபது பேருடன் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வந்திருந்தார்.
இளவரசியின் உருவப்படத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த கோப்பையில் மக்கள் வரிசையாக நின்று புனிதநீரை ஊற்றினர்.
“அவரது மறைவு எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரை ஒரு குழந்தையாக படத்தில் பார்த்து இருக்கிறேன்,” என்று ரோய் எட் மாவட்டதைச் சேர்ந்த நிட்டிகான் டொகாம், 79, தெரிவித்தார்.
“அவர் நோய்வாய்பட்டிருந்தபோது புனித சக்திகள் அவரைக் காக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். ஏதாவது ஒரு அதிசயம் நிகழும் என்று காத்திருந்தேன்,” என்றும் அவர் கூறினார்.
அரச குடும்பத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு செய்யப்படும் ஒரு வழக்கமான நடைமுறையின்படி, இளவரசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சுலாலோங்கோர்ன் மருத்துவமனையிலிருந்து அவரது உடல் ஜூன் 13 ஆம் தேதி பிற்பகலில் பெரிய அரண்மனைக்குக் கொண்டு வரப்படும்.
தொடர்புடைய செய்திகள்
இளவரசியின் உடலைக் கொண்டு செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று காவல்துறையும் போக்குவரத்து நிறுவனங்களும் எச்சரித்துள்ளன.
கடந்த 2016ல் மன்னர் பூமிபால் அடுல்யாடெஜ் மறைந்தபோது அவரது உடல் பெரிய அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அடுத்த ஆண்டு நடைபெற்ற விரிவான அரச இறுதிச்சடங்கு வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாய்லாந்து அரசாங்கம் இளவரசியின் இறுதிச் சடங்கு விவரங்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசியக் கொடிகள் அடுத்த 15 நாள்களுக்கு அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள் கறுப்பு உடை அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

