நோம்பென்: சிறைப் பிடிக்கப்பட்டிருந்த கம்போடிய ராணுவத்தினர் 18 பேரைப் புதன்கிழமை (டிசம்பர் 31), தாய்லாந்து விடுவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், கடந்த வாரயிறுதியில் சண்டை நிறுத்தம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கம்போடிய, தாய்லாந்து அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டனர்.
கடந்த சனிக்கிழமை இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கின. முன்னதாக, 20 நாள்களாகத் தொடர்ந்த சண்டையில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரு நாடுகளிலும் ஏறத்தாழ அரை மில்லியன் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.
இணக்கம் காணப்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை கம்போடிய ராணுவத்தினரைத் தாய்லாந்து விடுவிப்பதாகக் கூறியிருந்தது. ஆனால், கம்போடியா சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி விடுவிப்பு நடவடிக்கையைத் தள்ளிப்போட்டது.
அந்த 18 பேரும் 155 நாள்கள் தாய்லாந்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்றும் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை 10 மணியளவில் எல்லைச் சோதனைச்சாவடி ஒன்றில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் கம்போடியத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
தடுப்புக் காவலில் இருந்தபோது அவர்கள் அனைத்துலக மனிதநேயச் சட்டங்கள், கொள்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்டதாகத் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு கூறியது.

