பேங்காக்: இஸ்ரேலில் நீடிக்கும் சண்டையில் தாய்லாந்து நாட்டவர் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகத் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது. மேலும் 11 பேர் கடத்தப்பட்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.
“இஸ்ரேலில் உள்ள தாய்லாந்து குடிமக்கள் அனைவருக்கும் உதவ நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேல்மீது பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தியபோது தொடங்கிய போரில் எட்டு தாய்லாந்து நாட்டவர் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலில் ஏறக்குறைய 30,000 தாய்லாந்து நாட்டினர் உள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சு கூறியது. அவர்களில் பலர் வேளாண்மைத் துறையில் பணிபுரிகின்றனர்.
அபாயகரமான பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் ஊழியர்களை வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக தொழிலாளர்துறை அமைச்சர் பிப்பாட் ரட்சாகிட்பிராகார்ன் கூறினார்.
இஸ்ரேலிலும் காஸாவிலும் நடக்கும் பூசலில் 1,100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஹமாஸ் போராளிகள் பிணையில் பிடித்துவைத்திருந்த 11 தாய்லாந்து ஊழியர்களில் திரு பூந்தொம் பான்கொங் என்பவரும் ஒருவர்.
அதை அறிந்ததும் தாய்லாந்தின் உடோன் தானியில் உள்ள அவருடைய தாயாரும் சகோதரியும் கண்ணீர்விட்டு அழுதனர்.
தொடர்புடைய செய்திகள்
திரு பூந்தொம், 45, தன் மனைவி நத்தாவீ மூல்கனுடன் இஸ்ரேலில் ஐந்தாண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாக 85 வயது தாயார் கியான் பான்கொங்கும் 61 வயது சகோதரி உராய் சாந்தசார்ட்டும் கூறினர்.
இஸ்ரேல்மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்தத் தம்பதியர் அவர்களிடம் அகப்பட்டனர்.
தன் மகன் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று இறைவனை வேண்டி வருவதாக திருவாட்டி கியான் கூறினார்.
பிணையில் பிடித்துவைக்கப்பட்டுள்ள 11 பேரில் ஐந்து பேர் உடோன் தானியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது காஸா பகுதிக்கு அருகில் உள்ள வட்டாரத்தில் ஏறக்குறைய 5,000 தாய்லாந்துக் குடிமக்கள் தங்கியுள்ளனர்.

