பேங்காக்: தாய்லாந்தைச் சேர்ந்த 20 பேர் இன்னும் ஹமாஸ் போராளி இயக்கத்தின் பிடியில் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் நான்கு நாள் சண்டை நிறுத்தத்தின் முதல் நாளான நவம்பர் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஹமாஸ் இயக்கம் 24 பேரை விடுவித்தது. அவர்களில் பத்துப் பேர் தாய்லாந்து நாட்டினர். அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
இந்நிலையில், “தாய்லாந்தைச் சேர்ந்த இன்னும் 20 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன், வெள்ளிக்கிழமையன்று விடுவிக்கப்பட்ட பத்துப் பேரில் நால்வர் கடத்தப்பட்டிருந்ததை இஸ்ரேல் முன்னதாக உறுதிப்படுத்தவில்லை என்றும் அது குறிப்பிட்டது.
“எஞ்சியிருக்கும் பிணைக்கைதிகள் மனிதநேயத்துடன் நடத்தப்படுவர் என்றும் கூடிய விரைவில் அவர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவர் என்றும் உறுதியாக நம்புகிறோம்,” என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தால் விடுவிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் பத்துப் பேரின் படத்தை அமைச்சு வெளியிட்டுள்ளது.
மேலும், தாய்லாந்து நாட்டினர் விடுவிக்கப்பட்டதற்கும் சண்டை நிறுத்தத்திற்கும் தொடர்பில்லை என்றும் எகிப்து, கத்தார் நாடுகளின் உதவியோடு ஹமாசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் அவர்களின் விடுதலை சாத்தியமானது என்றும் சொல்லப்படுகிறது.
அந்தப் பத்துப் பேரும் விடுவிக்கப்பட்டதற்காகக் கத்தார், இஸ்ரேல், எகிப்து, ஈரான், மலேசியா ஆகிய நாடுகளுக்கும், அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கக் குழுவிற்கும், தீவிர முயற்சி எடுத்துக்கொண்ட மற்றவர்களுக்கும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு நன்றி தெரிவித்துக்கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
இஸ்ரேலில் தாய்லாந்து நாட்டினர் கிட்டத்தட்ட 30,000 பேர் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலோர் வேளாண்மைத் துறையில் வேலை செய்வதாகவும் கூறப்படுகிறது.

