மின்னிலக்கப் பணப்பை திட்டத்துக்கான தொகையைக் குறைக்கிறது தாய்லாந்து

மின்னிலக்கப் பணப்பை திட்டத்துக்கான தொகையைக் குறைக்கிறது தாய்லாந்து

1 mins read
41169d37-e1fa-48f7-befc-7b493f5b954b
மின்னிலக்கப் பணப்பை திட்டத்தின் ஒட்டுமொத்த தொகையை, 500 பில்லியன் பாட்டுக்கு (S$13.98 பில்லியன்) குறைக்க தாய்லாந்து அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.  - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து அரசாங்கம் அதன் ரொக்க வழங்கீட்டுத் திட்டத்துக்கான தொகையைச் சற்று குறைப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கூறியிருக்கிறார்.

தாய்லாந்தின் பொருளியலில் அத்திட்டம் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கம் குறித்து கவலை அதிகரித்துள்ளபோதும் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அந்த மின்னிலக்கப் பணப்பை திட்டத்தின் ஒட்டுமொத்த தொகையை, 500 பில்லியன் பாட்டுக்கு (S$13.98 பில்லியன்) குறைக்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. அந்தத் திட்டத்தின்மூலம் கிடைக்கும் தொகையை ஆறு மாதங்களுக்குள் 50 மில்லியன் மக்கள் தங்கள் உள்ளூர் பகுதிகளில் செலவு செய்யலாம் என்று திரு தவிசின் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.

தாய்லாந்துப் பொருளியலை மந்தநிலையிலிருந்து மீட்க, ஆளும் பியூ தாய் கட்சியின் சர்ச்சைக்குரிய அந்தக் கொள்கைக்கு முதன்முதலில் 560 பில்லியன் பாட் (S$15.66 பில்லியன்) ஒதுக்கப்பட்டது. பெரும்பான்மை தாய்லாந்து மக்களுக்கு, ஆளுக்கு 10,000 பாட் அதிலிருந்து வழங்கப்படவிருந்தது.

இந்தத் திட்டம் நிதிப் பிரச்சினைகளை ஏற்படுத்தி, பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று பொருளியல் வல்லுநர்களும் சில முன்னாள் வங்கியாளர்களும் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தத் திட்டத்துக்கான தொகையை அரசாங்கம் மேலும் குறைக்கும் என்று முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

திட்டத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 விழுக்காடு.

இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும். இருப்பினும், குறிப்பாக எப்போது என்பது சரியாகத் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்