நோம்பென்: எல்லையோரப் பகுதியில் இருந்த மஹாவிஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவம் தாக்கி அழித்துள்ளதாக கம்போடிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கம்போடியாவுக்குச் சொந்தமான எல்லைப் பகுதியான பிரியாஹ் விஹியரில் அந்த விஷ்ணு சிலை இருந்ததாக அந்நாட்டு அதிகாரி கிம் சன்பன்ஹா கூறினார்.
தாய்லாந்தின் எல்லையிலிருந்து 100மீட்டர் தொலைவில் 2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அச்சிலை, கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 22) அழிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கூகிள் வரைபடங்களில் தேடியபோது அச்சிலையின் அமைவிடம் எல்லைப் பகுதியிலிருந்து 400 மீட்டர் தொலைவில் இருந்ததாகக் காட்டியது. பல எல்லைப் பகுதிகளை இருநாடுகளும் தன்னுடையதாகக் கோரி, சண்டையிட்டு வருகின்றன.
“புத்த மதத்தினரும் இந்து சமயத்தவரும் வணங்கிவந்த அச்சிலையைப் போன்ற பல சமயச் சின்னங்களும் பண்டைய ஆலயங்களும் அழிக்கப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று திரு சன்பஹா கூறினார்.
இருநாட்டு ராணுவத் தாக்குதல்களில் இதுவரை 40பேர் மாண்டுள்ளனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் உறுப்பினர்களான இருநாடுகளும், சண்டைக்கு காரணம் என ஒன்றை ஒன்று பழி சுமத்தி வருகின்றன.

