மியன்மாருக்கு உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கிய தாய்லாந்து

மியன்மாருக்கு உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கிய தாய்லாந்து

1 mins read
ba1d5992-3c84-4deb-bf77-ffbc528ae070
அரிசி உள்ளிட்ட அன்றாடத் தேவைகள் அடங்கிய 4,000 பைகளைத் தாய்லாந்து செஞ்சிலுவைச் சங்கம் சரக்கு வாகனங்கள் மூலம் மியன்மாருக்கு அனுப்பி வைத்தது. - படம்: தாய்லாந்து வெளியுறவு அமைச்சு / ஃபேஸ்புக்

பேங்காக்: ராணுவ ஆட்சியின்கீழ் இருக்கும் மியன்மாருக்கு திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் தாய்லாந்து உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கியது.

மனிதநேயத் திட்டத்தின்கீழ் இடம்பெறும் இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக அரிசி, உலர் உணவுப்பொருள்கள், மற்ற இன்றியமையாத் தேவைகள் அடங்கிய 4,000 பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றின்மூலம் 20,000 பேர் பயன்பெறுவர் எனக் கூறப்பட்டது.

தாய்லாந்து செஞ்சிலுவைச் சங்கம் சரக்கு வாகனங்கள் மூலம் மியன்மார் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அவற்றை அனுப்பி வைத்ததாகத் தாய்லாந்து வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

பத்து ஆசியான் நாடுகள் ஆதரவுடன் கூடிய மனிதநேய வழித்தடத்தை நிறுவுவதற்கான விரிவான அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியே இந்த உதவிப்பொருள் அனுப்பும் திட்டம்.

இதனிடையே, மியன்மாரில் நடந்துவரும் உள்நாட்டுச் சண்டை காரணமாக குறைந்தது 2.6 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 18 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு உதவி தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மியன்மாரில் நடந்துவரும் சண்டைகளைக் கட்டுக்குள் கொண்டுவரவும் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கவும் தன்னால் பங்காற்ற முடியும் என்று தாய்லாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்