பேங்காக்: தாய்லாந்து அரசுப் பேருந்துச் சேவை நிறுவனமான ‘பார்க்கொர்சோர்’, கம்போடியாவிற்கான தனது சேவைகளைக் காலவரையறையின்றி நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, சியாம் ரெப் - நோம்பென் இடையிலான இருவழிப் பேருந்துச் சேவை நிறுத்தம் திங்கட்கிழமை (ஜூன் 9) முதல் நடப்பிற்கு வந்துள்ளது.
எல்லைச் சோதனைச்சாவடிகளைக் கடக்க பயணிகள் வாகனங்களுக்குத் திடீரென விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையால் இம்முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது என்றும் பார்க்கொர்சோர் தெரிவித்துள்ளது.
இதனால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டிருந்தால் அதற்காகப் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறிய அந்நிறுவனம், நிலைமை மேம்பட்டால் அதுகுறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
பேங்காக் - சியாம் ரெப், பேங்காக் - நோம்பென் பேருந்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்பதிவு செய்துள்ள பயணிகள் அல்லது கூடுதல் தகவல் தேவைப்படுவோர் https://tcl99web.transport.co.th எனும் இணையத்தளம் அல்லது www.facebook.com/BorKorSor99 எனும் ஃபேஸ்புக் பக்கம் அல்லது 99 எனும் நேரடி அழைப்பு எண் வழியாகத் தொடர்புகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
முன்னதாக, தங்களது படைகளை முந்தைய எல்லை நிலைகளுக்கே கொண்டுசெல்ல தாய்லாந்தும் கம்போடியாவும் இணங்கியிருப்பதாகத் தாய்லாந்துத் தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) தெரிவித்தது.
கடந்த மே 28ஆம் தேதி இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கம்போடியப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அந்தப் பதற்றமான சூழலைத் தணிக்க இருநாடுகளும் விரும்பியதாகக் கம்போடியா ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.