பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க தாய்லாந்து நடவடிக்கை

பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க தாய்லாந்து நடவடிக்கை

2 mins read
eb2ccf8a-3a81-41a8-9281-7c51ea1d6b56
பொருள்களின் விற்பனையையும் சேவைக் கட்டணங்களையும் அணுக்கமாகக் கண்காணிக்குமாறு மாநில ஆளுநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்தில் எரிபொருள், அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

பொருள்களைப் பதுக்கிவைப்பது, விலையைக் கூட்டுவது, அவசரகால விதிமுறைகளை மீறுவது முதலிய தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பத்தாண்டு வரை சிறைத்தண்டனையுடன் அதிகபட்சம் $3,900 அபராதத்தையும் எதிர்நோக்க நேரிடும் என்று அது எச்சரித்தது.

எரிசக்தி, அத்தியாவசிய பொருள்களின் நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் கையாளும் நிலையை மாநில நிர்வாகப் பிரிவு உயர்த்தி இருக்கிறது.

பொருள்களின் விற்பனையையும் சேவைக் கட்டணங்களையும் அணுக்கமாகக் கண்காணிக்குமாறு அனைத்து மாநிலங்களின் ஆளுநர்களுக்கும் அப்பிரிவின் தலைமை இயக்குநர் நருச்சா கொசாசிவிலைஸ் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பொருள்கள், சேவைகளின் விலைகளை மாநில வர்த்தக அலுவலகங்கள் சோதனையிடும். பெட்ரோல் நிலையங்களை மாநில எரிசக்தி அலுவலகங்கள் மேற்பார்வையிடும். அத்துமீறுவோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்வது மாநிலக் காவல்துறையின் பொறுப்பு. எல்லாம் சீராய்க் கட்டிக்காக்கப்படுவதை உறுதிசெய்ய மாவட்டத் தலைவர்களும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

நியாயமற்ற நடைமுறைகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது அந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்று மாநில நிர்வாகப் பிரிவு தெரிவித்தது. அத்துடன் நெருக்கடிக் காலத்தில், அத்தியாவசிய பொருள்களும் எரிபொருளும் நியாய விலையில் கிடைப்பதை உறுதிசெய்வதும் குறிக்கோள் என்று அது குறிப்பிட்டது.

இந்நிலையில், தாய்லாந்துக்குச் செல்லும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை மூவாண்டில் இல்லாத அளவுக்குக் குறையக்கூடும் என்று கூறப்படுகிறது. மத்திய கிழக்குப் போரால் உலக அளவில் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

போர் ஆறு மாதத்திற்கு நீடித்தால், தாய்லாந்துக்கு இவ்வாண்டு (2026) செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மில்லியன் குறையக்கூடும் என்று சுற்றுப்பயண, விளையாட்டுத் துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் நத்ரியா தவீவோங் தெரிவித்தார்.

இவ்வாண்டு 35 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் வருவர் என அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தால் பொருளியலுக்கு 5.9 பில்லியன் வெள்ளி இழப்பு ஏற்படும் என்று திருவாட்டி நத்ரியா கூறினார். அது 2025ல் பயணத் துறை ஈட்டிய வருவாயில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்