பேங்காக்: எஃப்1 கார் பந்தயத்தை 2028ஆம் ஆண்டிலிருந்து ஏற்று நடத்த தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.
உலகத் தரம்வாய்ந்த நிகழ்வுகள் நடைபெறும் இடமாகத் தாய்லாந்து திகழ வேண்டும் என்பதே இலக்கு என்று அந்நாட்டுப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் தெரிவித்தார்.
இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதைக் கண்டறிய தாய்லாந்து அரசாங்கம் ஆய்வு நடத்தும் என்று அவர் கூறினார்.
எஃப்1 கார் பந்தயத்தை நடத்தும் சாத்தியக்கூறுகள், அதன் காரணமாக தாய்லாந்துக்குக் கிட்டும் பலன்கள் ஆகியவை குறித்து ஆராயப்படும் என்று பிரதமர் பேடோங்டார்ன் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்
எஃப்1 கார் பந்தயத்தின் தலைமை நிர்வாகியான ஸ்டெஃபானோ டோமென்சியாலியை செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) பிரதமர் பேடோங்டார்ன் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் சந்தித்துப் பேசினார்.
வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பலரிடையே தாய்லாந்து பிரபலமான நாடாக இருந்து வருகிறது.
எஃப்1 கார் பந்தயத்தை ஏற்று நடத்துவதன் மூலம் மேலும் பலரை தாய்லாந்துக்கு ஈர்த்து சுற்றுப்பயணத்துறை வருமானத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.
தாய்லாந்தில் எஃப்1 பந்தயத்தை நடத்தினால் அதன் மூலம் பல புதிய வேலைகள் உருவாகும் என்று பிரதமர் பேடோங்டார்ன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், எஃப்1 நிர்வாகிகள் பேங்காக்கிற்குப் பயணம் மேற்கொண்டு பந்தயம் நடத்துவதற்கான உத்தேசப் பாதைகளை ஆராய்ந்தனர்.

