பேங்காக்: தாய்லாந்தில் இவ்வாண்டு இறுதிக்குள் சுற்றுலா வரி அறிமுகமாகிறது. அந்நாட்டுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தலா 300 பாட் (S$11.80) கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இது குறித்த விவரங்களை தாய்லாந்தின் சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சர் சோராவோங் தியன்தோங் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) வெளியிட்டார்.
தாய்லாந்துக்கு ஆண்டு இறுதியில் அதிக சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அச்சமயத்தில் சுற்றுலா வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா வரித் திட்டத்தின் விவரம் இன்னும் தெளிவாக இல்லை என்ற திரு சோராவோங், வரியை வசூலிக்க வருகைப் பதிவு அட்டையுடன் (Thailand Digital Arrival Card) தரவுகள் இணைப்பது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
இந்நிலையில் மே1ஆம் தேதியிலிருந்து மின்னிலக்க வருகை அட்டை அமல்படுத்தப்படுகிறது.
விமானங்களில் வரும் வெளிநாட்டுப் பயணிகள், ஒவ்வொரு முறையும் வரும்போது தலா 300 பாட் கட்டணம் செலுத்த வேண்டும். நிலம் அல்லது கடல் வழியாக வரும் பயணிகளுக்கான கட்டணமும் 300 பாட். ஆனால் இவர்கள், 30 முதல் 60 நாள்களுக்குள் பல முறை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
சுற்றுலா வரி மிகவும் குறைவாக இருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை என்று திரு சோராவோங் குறிப்பிட்டார்.
பயணிகளின் வசதிக்காக ஒரேயிட சேவையாக சுற்றுலா வரி செயல்படுத்தப்படும். அதற்கான நடைமுறைகளும் சுமுகமாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
முந்தைய ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான அரசாங்கம், 300 பாட் சுற்றுலா வரியை ஒத்தி வைத்திருந்தது.
இந்த வரியால் தாய்லாந்துக்கு ஆண்டுக்கு குறைந்தது மூன்று டிரில்லியன் பாட் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.