பேங்காக்: தாய்லாந்தின் பெயர் மாற்றப்பட்ட சர்ச்சைக்குரிய ‘பயண வரி’ அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கமாக விமானம் மூலமாக தாய்லாந்துக்கு வரும் பயணிகளுக்கு இவ்வரி விதிக்கப்படும் என்று சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்தது.
புதிய வரி, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்று அமைச்சர் சோரோவோங் தியன்தோங் அக்டோபர் 23ஆம் தேதி தெரிவித்தார்.
அதன் பிறகு 2025ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆறு மாதங்களுக்குள் வரி அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக விமானங்களில் வரும் பயணிகளுக்கு அந்த வரி விதிக்கப்படும் என்றார் அமைச்சர்.
தாய்லாந்தில் இறங்குபவர்களுக்கான வரி என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட வரிக்கு 2023ல் அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருந்தது.
விமானத்தில் வரும் வெளிநாட்டவர்களுக்கு 300 பாட் (S$11.70), நிலம் அல்லது கடல் வழியாக வருபவர்களுக்கு 150 பாட் வரி விதிக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதில் கிடைக்கும் பணம் வெளிநாட்டவர்களுக்கு காப்புறுதி வாங்கப் பயன்படுத்தப்படும், எஞ்சிய தொகை, சுற்றுலா மேம்பாட்டு நிதியில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் சோராவோங் குறிப்பிட்டார்.
சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும் உடல் ஊனமுற்றவர்களுக்கு கட்டடங்களில் வசதிகளை செய்யவும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கழிவறை கட்டவும் நிதி பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
வரியை வசூலிப்பதற்கான விண்ணப்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த விண்ணப்பம் க்ருங்தாய் (Krungthai) வங்கி கட்டமைப்புடன் இணைக்கப்படும். தற்போதைய காப்புறுதிக்கான கட்டணம் தொடர்ந்து நீடிக்கும். இது, வசூலிக்கப்படும் 300 பாட் தொகையிலிருந்து ஒரு ஆளுக்கு 60 பாட்டுக்கு மிகையாகாமல் இருக்கும். ஒரு வேளை எதிர்பாராமல் மரணம் ஏற்பட்டால் ஒரு மில்லியன் பாட் (S$39,122) காப்புறுதி தொகை வழங்கப்படும். காயங்களுக்கு அதிகபட்சமாக 500,000 பாட் இருக்கும் என்று அமைச்சு விளக்கியது.
வெளிநாட்டவர்கள் தாங்களாகவே காப்புறுதி வாங்குவது தனி. புதிய வரி, தாய்லாந்தில் 30 நாள்கள் வரை தங்கும் வெளிநாட்டவர்களுக்கு பொருந்தும். தாய்லாந்துக்கு வரும் 87% வெளிநாட்டவர்களுக்கு இது பொருந்தும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


