பேங்காக்: மருந்து விநியோகம், சுகாதாரச் சேவைகளை நிர்வகிப்பதற்கான மூன்று கட்டத் திட்டத்தைத் தாய்லாந்துப் பொதுச் சுகாதார அமைச்சு நடப்புக்குக் கொண்டுவந்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய மருந்துத் தட்டுப்பாடு, விலை உயர்வைச் சமாளிப்பதே அத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மருந்து, மருத்துவப் பொருள்கள் மீது ஏற்படக்கூடிய இடைக்கால (பொதுவாக 2 முதல் 5 ஆண்டுகள்) பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததாகத் தாய்லாந்து அமைச்சின் பொதுச் சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சோம்ரூக் சுங்சமான் (மார்ச் 23) தெரிவித்தார்.
தாய்லாந்தின் உணவு, மருந்து நிர்வாகம் ஏற்கெனவே மருந்து நிறுவனங்களுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் தற்போதைய கையிருப்பு கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும் என அந்த நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், மருந்துகளின் விலை உயர்வு என்பது தற்போதையை சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அவர் சொன்னார்.
குறிப்பாக, இஸ்ரேலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வார்ஃபரின் (warfarin) போன்ற ரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் குறித்துக் கவலைகள் எழுந்துள்ளன.
தற்போதுவரை மருந்து விநியோகத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், போர் நீடித்தால் இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து மாற்று மருந்துகளைப் பெறுவதற்கான அவசரகாலத் திட்டங்களை அமைச்சு தயாரித்து வருவதாகவும் திரு சோம்ரூக் சுங்சமான் குறிப்பிட்டார்.

