தாய்லாந்துப் பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி

தாய்லாந்துப் பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி

2 mins read
5eecfbab-b4fb-4f61-af84-2ffeff4d7121
தாய்லாந்துப் பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பெருவாரியான வாக்குகளை வென்று அரசாங்கத்தை அமைக்க மும்முனைப் போட்டி நிலவுகிறது.

பல ஆண்டுகாலமாக நீடிக்கும் நிலையற்ற அரசியல் மாற்றம், சட்டென மாறும் அரசியல் கட்சிக் கூட்டணிகள் என சீரற்ற அரசியல் களத்தை பார்த்து வரும் தாய்லாந்து மக்கள், வரவிருக்கும் தேர்தலில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் எனும் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களிக்கச் செல்கின்றனர்.

இடைக்காலப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் தலைவராக இருக்கும் பூம்ஜாய்தாய் கட்சி, முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் பியூ தாய் கட்சி, முன்னேற்ற மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துவதால், அடுத்த அரசாங்கத்தை அமைக்கப் போவது யார் என்ற பெரும்பரபரப்பு நிலவுகிறது.

சுமார் ஏழு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தாய்லாந்தில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க, 5 கோடிக்கும் அதிகமானோர் தகுதிபெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பொருளியல் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, நிலையான வருவாய், மக்கள் முன்னேற்றம் உள்பட அண்டை நாடான கம்போடியா உடனான எல்லைப் பூசல், அதற்கான தீர்வு என பல விவகாரங்கள் இத்தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் பேத்தோங்தார்ன் ஷினவாத் தலைமையிலான நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்நாட்டின் 32வது பிரதமராகப் பதவியேற்ற தற்போதைய பிரதமர் அனுட்டினுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.

இதற்கிடையே சில மாதங்களாக வகித்து வரும் பிரதமர் பதவியை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ளும்படி தீவிர முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது.

அவ்வகையில், தற்போதைய ஆட்சியாளர்களுக்கே ஆட்சியைப் பரிசளிப்பதா? குடும்ப அரசியலின் அடையாளமாக திகழும் பியூ தாய் கட்சியின் கரத்தில் அரசாங்கத்தை மீண்டும் அளிப்பதா என்பதைத் தாய்லாந்து மக்கள் வாக்களித்து முடிவுசெய்ய உள்ளனர் .

குறிப்புச் சொற்கள்