பேங்காக்: உலகளவில் விரைவில் வளர்ச்சியடைந்துவரும் பூச்சி உணவு வகைச் சந்தையை தாய்லாந்து தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் நிலையில் உள்ளது.
இவ்வாண்டுக்கும் 2030ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகப் பூச்சி உணவுச் சந்தை 25.1 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இப்போது தாய்லாந்து, உலகளவில் ஆக அளவில் பூச்சிகளை ஏற்றுமதி செய்யும் ஆறாவது நாடாக விளங்குகிறது. பூச்சி உணவுச் சந்தையில் வளர்ச்சியடைவதற்கு, பூச்சிப் பண்ணை நடத்துவதில் உள்ள திறன்களும் பூச்சி உணவுக்கு உள்நாட்டில் அதிகரித்துவரும் வரவேற்பும் தாய்லாந்துக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தருகின்றன.
பண்ணை விலங்குகள் சம்பந்தப்பட்ட பாரம்பரிய விவசாயத்திற்கு மாற்று ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நாடுகின்றனர். ஒட்டுமொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 14.5 விழுக்காடு அத்தகைய விவசாயத்தால் வெளியாவது அதற்குக் காரணம்.
அதனால், அதிக புரதச்சத்து உள்ள பூச்சி உணவு வகைகளை உட்கொள்ளும் போக்கு உருவாகியுள்ளது. பூச்சி விவசாயத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு கணிசமான அளவு குறைகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு கிலோ பூச்சி புரதச்சத்து வெறும் ஒரு கிலோ அளவு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இது, பாரம்பரிய விவசாயத்தால் வெளியாகும் கரியமில வாயு அளவைவிட 27லிருந்து 40 விழுக்காடு குறைவு.

