தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவாத் தேர்வு

3 mins read
7ab595d5-031d-4612-86cf-50d5fa5d1ea8
தாய்லாந்தின் புதிய பிரதமராகத் தம்மைத் தேர்ந்தெடுத்து தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மைக் கௌரவப்படுத்தியிருப்பதாகவும் இதனால் தாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவாத் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று தெரிவித்தார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் புதிய பிரதமராக பேடோங்டார்ன் ஷினவாத் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

37 வயது திருவாட்டி பேடோங்டார்ன், பியூ தாய் கட்சியின் தலைவர்.

இவர் முன்னாள் தாய்லாந்துப் பிரதமர் தக்சின் ஷினவாத்வின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு அக்கட்சியைச் சேர்ந்த திரு ஸ்ரெத்தா தவிசின் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தார்.

சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பிரதமர் பதவி ஏற்று ஓராண்டுகூட ஆகாத நிலையில் திரு ஸ்‌ரெத்தா தமது பதவியை இழந்தார்.

திரு ஸ்ரெத்தாவிடமிருந்து பிரதமர் பதவி பறிக்கப்பட்டு இரண்டு நாள்களில் திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவாத் தாய்லாந்தின் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திருவாட்டி பேடோங்டார்ன், புதிய அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பார் என்றும் அதனைத் தொடர்ந்து, தற்போதைய அமைச்சர்கள் பதவி விலகுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவாத்வின் அத்தையான திருவாட்டி யிங்லக் ஷினவாத்வும் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தவர்.

ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் காரணமாக திரு தக்சின், திருவாட்டி யிங்லக் ஆகியோர் பிரதமர் பதவியை இழந்தனர்.

திருவாட்டி யிங்லக் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே, தாய்லாந்தின் புதிய பிரதமராகத் தம்மைத் தேர்ந்தெடுத்து தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மைக் கௌரவப்படுத்தியிருப்பதாகவும் இதனால் தாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் திருவாட்டி பேடோங்டார்ன் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஃபியூ தாய் கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி பேடோங்டார்ன், பிரதமர் என்கிற முறையில் எதிர்நோக்கும் சவால்களைத் தம்மால் சமாளிக்க முடியும் என்று தெரிவித்தார்.

“நான்தான் ஆகச் சிறந்தவர், மற்ற அனைவரையும்விட புத்திசாலி என்று என்றைக்கும் நினைத்ததில்லை. ஆதரவை அள்ளித் தரும் தரமான குழு எனக்குக் கிடைத்துள்ளது. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. தரமான குழு இருக்கும்போது எத்தகைய சவால்களையும் முறியடித்துவிடலாம்.

“தாய்லாந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை எனது அரசாங்கத்தால் மேம்படுத்த முடியும் என்றும் அவர்களுக்குப் பல வாய்ப்புகளை எங்களால் ஏற்படுத்தித் தர முடியும் என்றும் அவர்களுக்கு நம்பிக்கையூட்ட விழைகிறேன்,” என்றார் திருவாட்டி பேடோங்டார்ன்.

இது ஒருபுறம் இருக்க, கிட்டத்தட்ட 14 பில்லியன் அமெரிக்க டாலர் (S$18.5 பில்லியன்) தொகையை தாய்லாந்து மக்களுக்கு வழங்கீட்டுத் தொகையாக கொடுக்கும் திட்டத்தை திருவாட்டி பேடோங்டார்ன் தலைமையிலான புதிய அரசாங்கம் கைவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தாய்லாந்து ஊடகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தைக் கைவிடுமாறு திரு தக்சின் ஷினவாத் தமது மகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஃபியூ தாய் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக தி நேஷன் சஞ்சிகை தெரிவித்தது.

இந்தத் தகவலை வெளியிட்டதாகக் கூறப்படும் நபரின் அடையாளத்தை சஞ்சிகை வெளியிடவில்லை.

இத்திட்டத்தால் பின்னடைவு, பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் அது தமது மகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கருதி அவரைப் பாதுகாக்கும் வகையில் திரு தக்சின் அவ்வாறு ஆலோசனை வழங்கியதாக நம்பப்படுகிறது.

“இத்திட்டத்தால் சட்டப் பிரச்சினை ஏற்பட்டு அதை எதிர்த்து யாராவது புகார் அளித்தால் திருவாட்டி பேடோங்டார்னுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்,” என்று தாய்லாந்தின் மஹிடோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் புஞ்சாடா சிரிவுன்னாபூட் தெரிவித்தார்.

இந்த வழங்கீட்டுத் தொகை திட்டம் குறித்து திருவாட்டி பேடோங்டார்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, பிரதமராகப் பதவி ஏற்றதும் அது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்