நோம்பென்: தாய்லாந்து, கம்போடிய எல்லைப் பகுதிகளில் பதற்ற நிலை தொடர்கிறது. தாய்லாந்து பகுதிக்குள் இருக்கும் சா கேய்யோ வட்டாரத்தில் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 17) அன்று வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழும் கம்போடியர்கள் மீது தாய்லாந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மறுநாள் செப்டம்பர் 18 அன்று தாய்லாந்து ராணுவம் அறிவித்தது.
அதனைக் கண்டித்து, கம்போடிய அரசாங்கம் அதிகாரபூர்வ ஆட்சேபணை தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் செயல், எல்லை வட்டாரங்களில் பதற்றத்தை மேலும் ஏற்படுத்துகிறது என்று கம்போடியா தெரிவித்துள்ளது.
முறையாக வகுக்கப்படாத எல்லையோரப் பகுதிகளில் தாய்லாந்து ராணுவம் உள்நாட்டு சட்டங்களை விதிப்பது அனைத்துலகச் சட்டத்துக்குப் புறம்பானது என்று கம்போடியாவின் அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் வெளியுறவுத் துறைக்கான அமைச்சு சனிக்கிழமை (செப்டம்பர் 20) அன்று கூறியது.
தாய்லாந்து ராணுவம், அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று எச்சரித்திருந்தது.
பிரே ச்சான் பகுதியில் செப்டம்பர் 17 அன்று நடந்த வன்முறையில், ரப்பர் தோட்டாக்களும் கண்ணீர் புகையும் பயன்படுத்தப்பட்டதாக கம்போடிய அரசாங்கம் கூறியுள்ளது. வலுக்கட்டாயமாக வட்டார இறையாண்மையை மக்கள்மீது சுமத்த எடுக்கப்பட்ட முயற்சி இது என்று சம்பவத்தைப் பற்றி கம்போடிய வெளியுறவு அமைச்சு கருத்துரைத்தது.
வரையறுக்கப்படாத சர்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் தாய்லாந்தின் ஆதிக்கம் ஐக்கிய நாட்டு சாசனத்தின் அடிப்படைகளுக்குப் புறம்பானது என்பதைக் குறிக்கிறது. அதன்படி மற்றொரு நாட்டின் பகுதி மீது அழுத்தம் கொடுக்கும் போக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றது அறிக்கை.
கம்போடியர்கள் அமைதியாக நடத்திய போராட்டத்திற்கு எதிராகக் கடுமையான குற்றவியல் தண்டனைகளை வழங்குவது, உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அனைத்துலக மனித உரிமைகள் சட்டங்களை மீறுவதாகும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.