தாய்லாந்தின் புதிய அரசாங்கம் அடுத்த வாரம் அறிமுகமாகும்: பிரதமர் அனுட்டின்

தாய்லாந்தின் புதிய அரசாங்கம் அடுத்த வாரம் அறிமுகமாகும்: பிரதமர் அனுட்டின்

2 mins read
8c81a815-2f4e-469f-85cd-5a1112292e37
தாய்லாந்தின் புதிய அரசாங்கம் அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என்றார் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு அனுட்டின் சார்ன்விராகுல். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் அடுத்த வாரத்துக்குள் புதிய அரசாங்கம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

இம்மாதம் 30ஆம் தேதிக்குள் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் கொண்ட பட்டியல் அரச அங்கீகாரத்துக்குச் சமர்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கம் கொள்கை அறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க துரிதமாகச் செயல்படும் என்று திரு அனுட்டின் கூறினார்.

ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதிக்குள் கொள்கை அறிக்கை முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பூம்ஜாய்தாய் கட்சி பிரசாரத்தின்போது கூறிய வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றார் திரு அனுட்டின்.

பயனீட்டாளர் மானியத் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையும் அதில் அடங்கும் என்றார் கட்சித் துணைத் தலைவர் சிரிபொங் அங்காசகுல்கியாட்.

மார்ச் மாதத்தின் முதற்பாதியில் எண்ணெய் விலைகள் சமாளிக்கப்பட்ட விதத்தால் ஏற்பட்ட குழப்பத்திற்குத் திரு அனுட்டின் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள்மீதான சுமையைக் குறைக்க அரசாங்கம் எண்ணெய் விலையை முதல் 15 நாள்களுக்கு மாற்றாமல் வைத்திருந்தது. மத்திய கிழக்குப் போர் தொடர்ந்து நீடித்ததால் நிலைமையைச் சமாளிக்க மாற்றங்களைச் செய்யவேண்டியது அவசியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

எண்ணெய் விலைமீது உச்சவரம்பு விதிப்பதை அரசாங்கம் நிறுத்திவிட்டது என்றும் எண்ணெய் வரிக் கழிவுகளை அறிமுகம் செய்ய அது திட்டமிடுகிறது என்றும் திரு அனுட்டின் கூறினார்.

அத்துடன் அதிகரிக்கும் எண்ணெய் விலைகளைக் கையாள பிற ஆதரவுத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும்.

புதிய அரசாங்கம் செயல்பாடுகளைத் தொடங்கியவுடன் பயனீட்டாளர் மானியத் திட்டம் அறிமுகம் காணும் என்றார் நிதியமைச்சர் லவரொன் சங்க்ஸ்னிட்.

உள்ளூர் எரிபொருள் விநியோகம் போதுமான அளவு இருப்பதால் பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்று திரு அனுட்டின் அறிவுறுத்தினார்.

தாய்லாந்தின் இருப்பில் தற்போதைக்கு உள்ள எண்ணெய் அடுத்த 107 நாள்கள் வரை நீடிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் கூடுதல் எண்ணெய் இறக்குமதி வந்துசேரும் என்று எரிசக்தி அமைச்சர் ஆட்டாபோல் ரெர்க்பிபூன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்