பேங்காக்: அண்மையில் தாய்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்ற அனுட்டின் சார்ன்விராக்குல் பொருளியல் சீரமைப்புக்கும் கம்போடியாவுடனான எல்லைப் பதற்றங்களுக்கும் விடை காணும் வகையில் தமது அமைச்சரவையில் கைதேர்ந்தவர்களை இணைத்துள்ளார்.
திறன்வாய்ந்த பொருளியல் நிபுணரும் அரசாங்கத்தில் நீண்டகால அனுபவம் உள்ளவருமான 54 வயது ஏக்நிதி நிதிதன்பிராபஸ் என்பவரை திரு அனுட்டின் நிதி அமைச்சராகப் பெயர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளின் மதிப்பைப் பெற்ற முன்னாள் அரசாங்க அரசதந்திரி ஒருவரை அவர் வெளியுறவு அமைச்சுக்குத் தேர்ந்து எடுத்துள்ளார்.
சீர்குலைந்திருக்கும் பொருளியலை சரிசெய்வதும் எல்லைப் பதற்றங்களுக்குத் தீர்வு காண்பதும் திரு அனுட்டின் அரசாங்கத்தின் முதல் இரு முன்னுரிமைகளாகக் கருதப்படுகின்றன.
தாய்லாந்து பிரதமராக ஏறத்தாழ ஓராண்டு காலம் பதவி வகித்த திருவாட்டி பெடோங்டார்ன் ஷினவாத் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ஆகஸ்ட் 29ஆம் தேதி பதவி விலகினார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்களிப்பில் திரு அனுட்டினுக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.
அதன் பின்னர், மன்னரின் அங்கீகாரத்தைப் பெற்ற அவர், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) தாய்லாந்தின் 32வது பிரதமராகப் பதவி ஏற்றார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துடன் உள்ள மக்கள் கட்சியின் ஆதரவுடன் அவர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பதவி ஏற்ற நான்கு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என மக்கள் கட்சியும் திரு அனுட்டினின் பும்ஜாய்தாய் கட்சியும் உடன்பாடு செய்துள்ளன.
அதன்படி, அடுத்த ஆண்டிற்குள் தேர்தலை நடத்த திரு அனுடின் உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் பதவி ஏற்றதும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்தி, மக்களும் நாடும் பயனடையும் வகையில் நேர்மையுடன் ஆட்சி நடத்துவேன்,” என்று கூறினார்.
மேலும் அவர், “எங்களுக்குப் போதுமான காலம் இல்லை என்பதால் ஒவ்வொருவரும் எங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். எனது அரசாங்கம் ஓய்வின்றி உழைக்கும். நான்கு மாத காலமே கொடுக்கப்பட்டு இருப்பதால் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்,” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
பும்ஜாய்தாய் கட்சியின் தலைவரான 58 வயது அனுட்டின், இதற்கு முன்னர் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்து
தாய்லாந்தின் புதிய பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, திரு அனுட்டினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று திரு வோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரும் தாய்லாந்தும் பல்வேறு அம்சங்களில் நீண்டகாலத் தோழமையையும் வலுவான பங்காளித்துவத்தையும் வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் வோங், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு திரு அனுட்டினின் தலைமைத்துவத்தின்கீழ் இன்னும் ஆழமாகத் தொடரும் என்று தாம் நம்புவதாகக் கூறியுள்ளார்.

