பேங்காக்: தாய்லாந்துக்குப் புதிதாக வந்துள்ள பிரதமர் சிதறிக்கிடக்கும் தனது கூட்டணி அரசாங்கத்தை மற்றொரு பொதுத் தேர்தலுக்கு தலைமை ஏற்று அழைத்துச் செல்லப்போவதாகத் தான் கொடுத்த வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
பழமைவாத சிந்தனையுடையவரும் தொழிலதிபருமான அனுடின் சார்ன்விராகுல் தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக செப்டம்பர் 5 தேர்வானார். அதைத் தொடர்ந்து இதற்கு முன் பிரதமராக இருந்த பெடோங்டார்ன் ஷினவாத்ர பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு ஒருவார காலம் நீடித்த அதிகார வெற்றிடம் முடிவுக்கு வந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
புதிய பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் கட்டுமானத் துறையில் தொழிலதிபராக விளங்குபவர். இவர் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான தக்சின் ஷினவத்ர ஏற்படுத்திய பரம்பரை அரசியல் கட்சியான பியூ தாய் கட்சியின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அந்தக் கட்சிக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டி ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. ஆனால், அதற்கு அது ஒரு நிபந்தனையை அது விதித்தது. அது என்னவெனில் அடுத்த நான்கு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்பதே அது.
“அனைத்து உடன்படிக்கைகளையும் நான் கடைப்பிடிப்பேன்,” என்று வெள்ளிக்கிழமை தனது கட்சி தலைமை அலுவலகத்தில் பேசிய புதிய பிரதமர் தெளிவுபடுத்தினார்.
“எனது குறுகியகால ஆட்சியில் தாய்லாந்து ஒரு புன்சிரிப்புடன் விளங்கும் நாடு என்ற உணர்வை மீண்டும் கொண்டுவர வேண்டும்,” என்று கூறிய திரு அனுடின் தமக்கு ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக்கொள்வது பிடிக்காது என்று கூறினார்.
முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ர எதிர்பாரா விதமாக தாய்லாந்தை விட்டு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5ஆம் தேதி) துபாய் செல்லும் விமானத்தில் ஏறிப் பயணமானார். அவர் தமது நண்பர்களைச் சந்திப்பதற்காக செல்வதாகவும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக செல்வதாகவும் கூறிச் சென்றுள்ளார். இது குறித்தும் புதிய பிரதமர் அனுடின் கருத்துக் கூறினார்.
அவர், தனது ஆட்சியின்கீழ் எவருக்கும் பாரபட்சமான போக்கு, அபாண்டமான குற்றச்சாட்டு, பழி தீர்த்துக்கொள்ளுதல் போன்றவை இருக்காது என்று தெரிவித்தார்.