பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் சனிக்கிழமை (அக்டோபர் 25) மலேசியா செல்கிறார். அங்குக் கம்போடியாவுடன் சண்டை நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திடப்போவதாக அவர் கூறினார்.
கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை உடன்பாட்டில் கையெழுத்திட்ட பிறகு, நாடு திரும்பப்போவதாகத் திரு அனுட்டின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தாய்லாந்தின் முன்னாள் அரசியார் சிரிகிட் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) காலமானார். அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஏபெக் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று திரு அனுட்டின் கூறியுள்ளார்.
மாநாட்டையொட்டி, ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பும் அமெரிக்க-சீனக் குழுவினரின் வர்த்தகப் பேச்சுகளும் இடம்பெறும்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை காலை கோலாலம்பூர் செல்கிறார். ஆசியப் பயணத்தின் முதற்கட்டமாக அவர் அங்குப் போகிறார்.
கம்போடியாவும் தாய்லாந்தும் சண்டை நிறுத்தம் குறித்த விரிவான உடன்பாட்டில் கையெழுத்திடுவதை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார். கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் இவ்வாண்டு (2025) ஜூலை மாதம் எல்லைப் பகுதியில் ஐந்து நாள் சண்டை மூண்டது. அதை முடிவுக்குக் கொண்டுவர திரு டிரம்ப் உதவினார்.

