தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்தின் முன்னாள் அரசியார் காலமானார்

2 mins read
440a25fb-f181-429a-95c0-6025aef51079
2012ஆம் ஆண்டு தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள சைனாடவுனில் நடைபெற்ற சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் முன்னாள் அரசியார் சிரிகிட் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் அரசியார் சிரிகிட் கிட்டியகாரா காலமானார். அவருக்கு 93 வயது.

முன்னாள் அரசியார் சிரிகிட், தாய்லாந்து நேரப்படி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) இரவு 9.21 மணிக்கு சூலாலொங்கோர்ன் மருத்துவமனையில் இயற்கை எய்தியதாகத் தாய்லாந்து அரச மாளிகை அறிவித்தது.

2012ஆம் ஆண்டில் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டதிலிருந்து பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை. 2019ஆம் ஆண்டில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார்.

இம்மாதம் அவருக்கு ரத்தத் தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அரசியார் சிரிகிட்டின் கணவரான மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ், தாய்லாந்து வரலாற்றில் ஆக அதிக ஆண்டுகள் மன்னராக இருந்தவர்.

1946ஆம் ஆண்டில் முடிசூட்டப்பட்ட மன்னர் பூமிபோல், 70 ஆண்டுகள் மன்னராக இருந்தார். தமது கணவருடன் சேர்ந்து அரசியார் என்கிற முறையில் முன்னாள் அரசியார் சிரிகிட் பல அறப்பணிகளில் ஈடுபட்டார்.

இளமைக் காலத்தில் அவர் தமது கணவருடன் அதிகாரபூர்வப் பயணங்களை மேற்கொண்டபோது அவரது அழகு, நயம் ஆகியவற்றை மேற்கத்திய ஊடகங்கள் வெகுவாக மெச்சின.

முன்னாள் அரசியார் சிரிகிட் 1932ஆம் ஆண்டில் பிறந்தவர். அவரது தந்தை பிரான்சுக்கான தாய்லாந்தின் தூதராக இருந்தவர். சுவிட்சர்லாந்தில் அவர் கல்வி பயின்றபோது மன்னர் பூமிபோலைச் சந்தித்தார். அப்போது அவர்களிடையே காதல் மலர்ந்தது.

1956ஆம் ஆண்டில் தாய்லாந்தில் கடைப்பிடிக்கப்படும் சடங்கு சம்பிரதாயப்படி, குறுகியகாலகட்டத்துக்குத் துறவறம் மேற்கொள்ள மன்னர் பூமிபோல் இரண்டு வாரங்கள் பௌத்த கோயிலில் தங்கியபோது, முன்னாள் அரசியார் சிரிகிட் அரசப் பணிகளைக் கவனித்துக்கொண்டார்.

1976ஆம் ஆண்டில் அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 12, தாய்லாந்தின் அன்னையர் தினமாகவும் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது.

மன்னர் பூமிபோல் 2016ஆம் ஆண்டில் காலமானார். பூமிபோல்-சிரிகிட் அரச தம்பதியருக்குப் பிறந்த மகா வஜ்ராலோங்கோர்ன் தாய்லாந்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

2019ஆம் ஆண்டில் திருவாட்டி சிரிகிட்டுக்கு முன்னாள் அரசியார் என்ற பட்டம் சூட்டப்பட்டது.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்‌ஷின் ஷினவாத்தின் தலைமையிலான அல்லது அவருடன் தொடர்புடைய அரசாங்கங்களைக் கவிழ்க்க நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ராஜமாதா சிரிகிட் ஈடுபட்டார்.

இதற்காக, திரு தக்‌ஷினுக்கு எதிராகச் செயல்பட்ட ஜனநாயக மக்கள் கூட்டணயுடன் முன்னாள் அரசியார் சிரிகிட் தம்மைத் தொடர்புபடுத்திக்கொண்டார்.

2008ஆம் ஆண்டில் அக்கூட்டணியைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் காவல்துறையினருக்கு எதிரான மோதலில் மாண்டதை அடுத்து, அவரது இறுதிச் சடங்கில் முன்னாள் அரசியார் சிரிகிட் கலந்துகொண்டார்.

முன்னாள் அரசியார் சிரிகிட்டுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்