பேங்காக்: தாய்லாந்தின் ஆளும் ஃபியூ தாய் கட்சி தனது பிரதமர் வேட்பாளரைக் களமிறக்கப்போவதாக அறிவித்துள்ளது.
தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க நடைபெறவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பை முன்னிட்டு அக்கட்சி இதனைத் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான பும்ஜாய்தாய் கட்சியும் பிரதமர் வேட்பாளரைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் ஃபியூ தாய் கட்சியின் அறிவிப்பு வந்துள்ளது.
ஃபியூ தாய் கட்சியின் பெடோங்டார்ன் ஷினவாத் பதவிநீக்கம் செய்யப்படவேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் சென்ற வாரம் தீர்ப்பளித்தது. அதனையடுத்து ஆதரவைத் திரட்ட அக்கட்சி சிரமப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஃபியூ தாய் கட்சி பிரதமர் வேட்பாளராக மூத்த வழக்கறிஞர் சைக்காசம் நித்திசிரியைக் களமிறக்கவுள்ளது. அமைச்சரவை அனுபவம் அதிகம் இல்லாத அவர், பும்ஜாய்தாய் தலைவர் அனுட்டின் செய்ன்விராக்குல்லை எதிர்த்துப் போட்டியிடுவார்.
இந்நிலையில், ஃபியூ தாய் கட்சி, நாடாளுமன்றத்தைக் கலைக்க அனுமதி கேட்டிருந்தது. அதைத் தாய்லாந்து மன்னராட்சி அதிகாரிகள் நிராகரித்துவிட்டதாக அந்நாட்டின் தற்காலிகப் பிரதமர் ஃபும்தான் வெச்சாயாச்சாய் வியாழக்கிழமை (செப்டம்பர் 4) தெரிவித்தார்.
அதனால் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாட்டி பெடோங்டார்டனைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து தாய்லாந்து அரசியலில் வெற்றிடம் இருந்துவருகிறது.