தாய்லாந்து: தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அந்நாட்டு ஆளும் பூம்ஜைதை கட்சி, கம்போடியாவுடனான பூசலை முடிவுக்குக் கொண்டுவர வாக்குறுதி அளித்துள்ளது.
மோசடி நிலையங்களில் வேலைசெய்யும்படி கடத்தப்படுவோர் தாய்லாந்து வழியாகக் கொண்டுசெல்லப்படுகின்றனர் என்ற கலங்கத்தையும் துடைக்கப்போவதாகக் கட்சி சூளுரைத்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆட்சிக்கு வந்தது பழைமைவாத பூம்ஜைதை கட்சி.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே மூண்ட எல்லைப் பூசலின்போது தாய்லாந்தைத் தற்காக்க தன்னால்தான் முடியும் என்று கட்சி தன்னையே முன்னிலைப்படுத்தியது.
இந்நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றால் தாய்லாந்தின் அரசுரிமையைத் தற்காத்து கம்போடியாவுடனான இருதரப்பு உறவைப் பூம்ஜைதை கட்சி சீர்படுத்தும் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசாக் புவாங்கெட்கியாவ் கூறினார்.
கட்சியின் தலைவர் அனுடின் சார்ன்விராகுல்லுக்கு அடுத்து இரண்டாவது பிரதமர் வேட்பாளராகத் திரு சிஹாசாக் முன்னிறுத்தப்படுகிறார்.
“கம்போடியாவுடனான பூசலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு நம்பிக்கையை வலுப்படுத்தி கம்போடியாவுடனான உறவைக் கட்சி முன்னெடுத்துச் செல்லும்,” என்றார் அவர்.
எனினும், பூம்ஜைதை கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மூன்றாவது முறையாக எல்லையில் சண்டை மூளும் என்று கம்போடிய அமைச்சர் கியோ ரெமி சொன்னதைத் திரு சிஹாசாக் மறுத்துப் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அண்டை நாடுகளின் மோசடி நிலையங்களில் வேலை செய்யும்படி கடத்தப்படுவோரைக் கொண்டுசெல்ல தாய்லாந்து பயன்படுத்தப்படும் போக்கை முறியடிக்கவேண்டும் என்று திரு சிஹாசாக் குறிப்பிட்டார்.
“மோசடிகளைக் களைய வட்டார ரீதியான அனைத்துலக அளவிலான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் என்றால் முதலில் நம்மை நாம் சரிபார்த்துக்கொள்ளவேண்டும்,” என்றார் அவர்.
மோசடியில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தேடி கண்டுபிடித்தால் தாய்லாந்திற்கு ஏற்பட்ட கலங்கத்தைத் துடைக்க முடியும் என்றார் திரு சிஹாசாக்.

