தைப்பூசம்: பத்துமலையில் 2.5 மில்லியன் பேர் திரளக்கூடும்

2 mins read
2bf076bd-8bf6-44c5-a5a9-6fe1a77daa32
சென்ற ஆண்டு பத்துமலையில் இடம்பெற்ற தைப்பூசக் கொண்டாட்டங்கள். - கோப்புப் படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: இவ்வாண்டின் தைப்பூசத் திருநாளையொட்டி 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பத்துமலைக்குச் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு தைப்பூசத் திருநாள் காலத்தில் பதிவானதைவிட அதிகமாகும். நீண்ட விடுமுறை வருவதன் காரணமாக வருகையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகையாளர்களில் பக்தர்கள், உள்ளூர் மற்றும் அனைத்துலகச் சுற்றுப்பயணிகள், பொதுவாக அப்பகுதிக்கு வந்து செல்பவர்கள் ஆகியோர் அடங்குவர் என்று ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் என். சிவகுமார் தெரிவித்தார்.

“சென்ற ஆண்டு, நான்கிலிருந்து ஏழு நாள்களுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 2.5 மில்லியன் மக்கள் வருகை தந்தனர். இவ்வாண்டு தைப்பூசத் திருநாள் காலம் நீண்ட விடுமுறையாக இருப்பதால் எண்ணிக்கை அதையும் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று திரு சிவகுமார் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு தைப்பூசத் திருநாள் பிப்ரவரி ஒன்றாம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில்தான் மலேசிய கூட்டரசு தினமும் (Federal Territory Day) வருகிறது.

இந்நிலையில், பினாங்கு மாநிலத்தில் தைப்பூச ஊர்வலம் நடக்கும் பாதையில் அமையும் தண்ணீர்ப் பந்தல்களில் பிப்ரவரி இரவு 11 மணிக்கு மேல் இசைக் கருவிகளை வாசிக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்த பிறகு இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பினாங்கு மாநிலத்துக்கான மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும் பினாங்கு இந்து அறக்கட்டளை வாரிய ஆணையருமான தினகரன் ஜெயபாலன் தெரிவித்தார்.

அந்த உத்தரவைக் காவல்துறைதான் பிறப்பித்தது என்றும் அது பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டதல்ல என்றும் அவர் விவரித்தார்.

இசைக் கருவிகளை இரவு 10 மணிக்கு மேல் வாசிக்கக்கூடாது என்பதே காவல்துறை முதலில் விடுத்த உத்தரவு என்று திரு தினகரன் கூறியதாக தி ஸ்டார் ஊடகம் குறிப்பிட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, பொதுமக்களின் பாதுகாப்பு சார்ந்த கவலைகள் ஆகியவை அதற்கான காரணங்கள்.

காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கூடுதல் ஒரு மணிநேரத்துக்கு இசைக் கருவிகளை வாசிக்க அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். நள்ளிரவு 12 மணி வரை இசைக் கருவிகளை வாசிக்க அனுமதிக்குமாறு பக்தர்களும் தண்ணீர்ப் பந்தல்களை நடத்துவோரும் விடுத்த வேண்டுகோள் மறுக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்