ஆசியானின் அதிகாரபூர்வமற்ற ஆலோசகராக தக்சின் நியமனம்

1 mins read
d9e995da-e6b1-4e3d-b01b-4473cc4b90bb
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத். - படம்: ஏஎஃப்பி

புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்தை தனது தலைமையிலான ஆசியானுக்கு அதிகாரபூர்வமற்ற ஆலோசகராக நியமித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் ஆசியானுக்கு மலேசியா தலைமை தாங்குகிறது.

ஆசியானுக்குத் தலைமை தாங்க இருக்கும் திரு அன்வாரின் அதிகாரபூர்வமற்ற ஆலோசகராக திரு தக்சின் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு தக்சினை அனுபவம்வாய்ந்த அரசியல்வாதி என்று வர்ணித்த பிரதமர் அன்வார், அவரது ஆலோசனைகள் மலேசியாவுக்குப் பேரளவில் பலன் அளிக்கும் என்று கூறினார்.

“ஆசியான் நாடுகளைச் சேர்ந்த குழுவுடன் தக்சினையும் எனது அதிகாரபூர்வமற்ற ஆலோசகராக நியமிக்கிறேன். இந்த ஏற்பாட்டுக்கு இணக்கம் தெரிவித்ததற்கு நன்றி. தக்சின் போன்ற அனுபவமிக்க அரசியல்வாதியின் திறன்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன,” என்று டிசம்பர் 16ஆம் தேதியன்று மலேசியாவில் உள்ள பெர்டானா புத்ராவில் தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத்தை வரவேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய திரு அன்வார் கூறினார்.

திரு தக்சினை, திரு அன்வாரின் அதிகாரபூர்வமற்ற ஆலோசகராக நியமிக்கும் பரிந்துரையை மலேசியா முன்வைத்ததாகவும் அதற்குத் தாய்லாந்து இசைந்ததாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

தாய்லாந்துப் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் தமது மிக நெருங்கிய குடும்ப நண்பர் என்று திரு அன்வார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்