பேங்காக்: தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத், 74, செவ்வாய்க்கிழமை தாயகம் திரும்பினார்.
பெருஞ்செல்வந்தரான அவர், தாய்லாந்தில் 2006ஆம் ஆண்டு நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு, ஏறத்தாழ 15 ஆண்டுகள் அவர் தாமாகவே நாட்டைவிட்டு வெளியேறி சிங்கப்பூரில் வாழ்ந்து வந்தார்.
தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெறும் செவ்வாய்க்கிழமையன்று தக்சின் தாயகம் திரும்பியிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தனிவிமானத்தில் டோன் முவாங் அனைத்துலக விமான நிலையத்தில் காலை 9 மணிக்குத் தரையிறங்கினார். முதலில் அவர் விமான நிலைய முனையக் கதவுகளுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த தாய்லாந்து மன்னரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரைக் காண்பதற்காக விமான நிலையச் சாலைகளில் காத்திருந்தனர்.
தாய்லாந்துக் காவல்துறை, விமான நிலையத்திலிருந்து தக்சினை உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குக்குக் கடன் வழங்குமாறு அரசு நடத்தும் வங்கிக்கு உத்தரவிட்டது, சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் மூலம் பங்குகளை வாங்கி வைத்திருந்தது போன்ற மூன்று வெவ்வேறு குற்றங்களுக்காக அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
பின்னர் அவர் பேங்காக்கின் கிளோங்பிரேம் மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
வயது, உயர் ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் கோளாறுகள் போன்ற மருத்துவ பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு அவரை அனைத்து மருத்துவ வசதிகளும் கொண்ட தனிஅறையில் வைத்திருப்பதாகவும் அவர் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

